உள்ளடக்கத்துக்குச் செல்

கடல் உயிரினங்களைப் பாதுகாக்க மீன்பிடித்தலில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 9, 2011

பல்லாண்டுகளாக மீன் பிடித்தலில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மீனவர்கள் தமக்குத் தேவையான வகை மீன்களையும் தேவையான அளவு மீன்களையும் பிடிப்பதற்கேதுவான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதில் அறிவியலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.


வலையில் சிக்கிய மீன்கள்

பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லை மீறிய மீன்பிடிப்பை ஏதுவாக்கி, பல்வேறு கடல்களில் மீன்களின் முழுமையான அழிவுக்கு உதவியுள்ளன. இந்த அபாய நிலை பற்றி மீனவர்கள் உட்பட எல்லோரும் அக்கறை கொண்டு சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். அரச சட்டங்களும் புதிய தொழில்நுட்பங்களும் இந்த வகையில் உதவியுள்ளன.


மீன்பிடிப்பின் போது பெருந்தொகையான வேண்டப்படாத கடல் உயிரினங்கள் அகப்பட்டு அவை கடற்கரையில் இறக்க விடப்படுகின்றன. இதைத் தடுக்க சில தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. "உயிரினப் பாதுகாப்பு" (Biological Conservation) என்ற ஆய்வேட்டில் வெளியாகியுள்ள கட்டுரையில் ஆமைகள் தப்பும்படி வலைகள் அமையவேண்டும் என்ற சட்டத்தின் பின் ஐக்கிய அமெரிக்காவில் ஆமைகள் கொல்லப்படுவது 90% தவிர்க்கப்பட்டுள்ளது.


சிறிய சோனார் கருவிகள் டொல்பின்கள் வலையில் அகப்படுவதைத் தடுக்கின்றன. கப்பலில் அமையும் கண்காணிப்புக் கருவிகள் அருகிய நிலையில் இருக்கும் உயிரினங்கள் பிடிபட்டுள்ளனவா என்று அறிய உதவுகின்றன. சில சிறப்பு கொக்கிகள் அல்லது தூண்டில்களும் சில வகை மீன்கள் தப்ப உதவுகின்றன. புதிய வகை இழுவலைகள் சில குறிப்பிட்ட உயிரினங்களை மட்டும் இழுக்கும் வகையில் விருத்தி செய்யப்பட்டுள்ளன.


இவ்வாறு புதிய தொழில்நுட்பங்கள் பேண்தகு முறையில் மீன்பிடிப்புச் செய்ய உதவி செய்கின்றன. எனினும் தற்போதைய நிலையில் பல நாடுகளில் எல்லை மீறிய மீன்பிடிப்புத் தொடர்கிறது.


மூலம்

[தொகு]