கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: கருநாடக மாநிலத்தில் இன்று வெளியீடு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 29, 2013

சர்ச்சைக்குரியதாகியுள்ள திரைப்படமான கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’, இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுமைக்குமாக 40 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலத் தலைநகர் பெங்களூரில் 17 திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இங்கெல்லாம் ‘அரங்கு நிறைந்த காட்சிகளாக’ திரைப்படம் ஓடிக் கொண்டிருப்பதாக கருநாடக மாநிலத்தில் இப்படத்தை வெளியிட்டுள்ள எச். டி. கங்கராஜு தெரிவித்துள்ளார்.

“எல்லா இசுலாமியர்களும் தீவிரவாதிகள் அல்லர்” எனும் வரி இத்திரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை இசுலாமியத் தலைவர்களை உள்ளடக்கிய குழுவினால் எழுப்பப்பட்டதாக பெங்களூர் நகர காவல்துறை ஆணையர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி தெரிவித்தார். தான் இந்தப் படத்தைப் பார்த்ததாகவும், “ஆட்சேபணைக்குரிய கருத்துகள் எதுவும் திரைப்படத்தில் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சனவரி 25 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இத்திரைப்படம், தமிழ்நாட்டில் இரு வார காலத்திற்கு தடைக்குள்ளாகியுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியமையே இத்தடைக்குக் காரணமாகும்.

முன்னதாக காவல்துறைப் பரிந்துரைப்பின்படி, கருநாடக மாநிலத்தில் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. மிலாது நபி மற்றும் குடியரசு தினம் வருவதையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. சனவரி 26 அன்று பத்ராவதியில் நிகழ்ந்த ஒரு குழு மோதலும், தாமதமான வெளியிடலுக்குக் காரணம்.


மூலம்[தொகு]