காபூல் உணவகம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 18, 2014

ஆப்கானித்தான் தலைநகர் காபூலில் உள்ள உணவகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அனைத்துலக நாணய நிதியத்தின் பணியாளர் மற்றும் ஐ.நா பணியாளர்களும் அடங்குவார். இந்த தாக்குதலில் ஆப்கானித்தவர்கள், பிரித்தானியர்கள் மற்றும் லெபனானைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த இத்தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்.

ஆப்கானித்தானில் அமெரிக்கப் படையினர்

காபூலின் வசீர் அப்துல் கான் எனப்படும் பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் வெளிநாட்டவர் மற்றும் ஆப்கானித்தானில் உள்ள இராஜதந்திரிகள் மத்தியில் மிகப் பிரபலமானதாகும். தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் அங்கு பலர் உணவருந்திக்கொண்டு இருந்தனர். நேற்று மாலை 7.30 அளவில் ஒரு தற்கொலை குண்டுதாரி உணவகத்தின் வாசல் கதவை வெடித்துச் சிதற வைத்ததும் இரண்டு துப்பாகிதாரிகள் உள் நுழைந்து கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.


ஐ.நா செயலாளர் பான் கி மூன் மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் கிரிஸ்டைன் லகார்டே ஆகியோர் தமது கண்டனங்களையும் இறந்தவர்கட்கு இரங்கலையும் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் உயிர் தப்பிய சமையல்காரர் அப்துல் மஜிட் கருத்துத் தெரிவிக்கையில், அங்கே ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், சிறிது நேரத்தில் உள்ளே ஒருவர் கத்தியவாறு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் தன் நண்பன் அடிபட்டு கீழே வீழ்ந்ததாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தான் மேல் கூரைக்கு ஓடிச் சென்று அங்கிருந்து எல்லைக்கு அப்பால் பாய்ந்ததாகவும் தெரிவித்தார்.


சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரிகளைக் கொலை செய்தனர் என்று ஆப்கானிய அரசு அறிவித்துள்ளது.


இத் தாக்குதல் பற்றித் தலீபான் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள் இந்த உணவகத்திற்கு வரும் வெளி நாட்டவரைக் குறி வைத்தே தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆப்கானித்தானில் பெரும் கேள்விக்குறியாள உள்ளமையுடன், ஆப்கானித்தானில் இருக்கும் நேட்டோ படையின் இறுதி படையணியும் இந்த வருட இறுதியில் ஆப்கானித்தானை விட்டு வெளியேற உள்ளமை குறிப்பிடத்தக்கது. தாம் ஏற்கனவே ஆப்கானிஸ்தானின் பெரும் பாகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதும் மீளவும் ஆப்கானித்தானை தமது கட்டுப்பாட்டினுள் தாம் கொண்டுவந்துவிடுவோம் என்றும் தலீபான் அறிவித்துள்ளனர்.


இதேவேளை வாசிங்டன், வெளிநாட்டுப் படைகளின் வெளியேற்றத்தின் பின்னரும் அமெரிக்கப் படைகளை ஆப்கானித்தானில் தங்க வைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டி ஆப்கானிய அரசை வற்புறுத்தி வருகின்றது.


மூலம்[தொகு]