உள்ளடக்கத்துக்குச் செல்

கினி-பிசாவுவில் மீண்டும் இராணுவப் புரட்சி, கடற்படைத் தளபதி கைது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 28, 2011

மேற்கு ஆப்பிரிக்காவில் கினி-பிசாவு நாட்டில் கடந்த திங்கள் அன்று இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கடற்படைத் தளபதி ஒசே அமெரிக்கோ பூபோ நா சூட்டோ கைது செய்யப்பட்டுள்ளார். குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர்.


சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொருட்டு அன்றிரவு முழுவதும் ஆங்காங்கே சண்டைகள் இடம்பெற்றதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கினி-பிசாவு நாட்டின் அரசுத் தலைவரும் சனாதிபதியுமான பலாம் பக்காய் சானா இம்மாத ஆரம்பத்தில் இருந்து பிரான்சில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.


கடந்த ஆண்டில் கடற்படைத் தளபதி ஒரு "போதைப்பொருள் கடத்தல் மன்னன்” என ஐக்கிய அமெரிக்காவினால் குற்றம் சாட்டப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக இலத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு கினி-பிசாவினூடாகவே போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்துள்ளன.


தலைநகர் பிசாவுவில் திங்கள் அதிகாலை முதல் குழப்பநிலை இருந்து வந்தது. பிரதமர் கார்லோசு கோமஸ் அங்குள்ள அங்கோலா தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார். புரட்சியில் பங்கெடுத்துக்கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் செவ்வாய் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். திங்களன்று இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.


அதிக ஊதியம் கோரி படைவீரர்களே இராணுவத் தலைமையகத்தைத் தாக்கியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் கடத்தலில் இராணுவத்தினுள் இரண்டு குழுக்கள் செயல்படுவதாக வதந்திகள் கிளம்பியுள்ளன.


ஆனாலும், அரசாங்கத்தை கவிழ்க்கவே முயற்சிகள் மேற்கொள்லப்பட்டதாக இராணுவத் தலைவர் ஜெனரல் அந்தோனியோ இஞ்சாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 30 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


1974 ஆம் ஆண்டில் போர்த்துக்கல் இடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் கினி-பிசாவு நாட்டில் பல முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2009 இல் அரசுத்தலைவர் நீனோ வியெரா இராணுவப் புரட்சி ஒன்றின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]