உள்ளடக்கத்துக்குச் செல்

கினி-பிசாவு அரசுத்தலைவர் பாரிசில் காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 10, 2012

மேற்கு ஆப்பிரிக்காவின் கினி-பிசாவு நாட்டின் அரசுத் தலைவர் மாலம் பக்காய் சானா தனது 64வது அகவையில் பாரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார் என கினி-பிசாவு அரசு வானொலி நேற்று அறிவித்தது. கடும் சுகவீனமுற்று மேலதிக சிகிச்சைக்காக கடந்த நவம்பரில் இவர் பாரிஸ் சென்றார்.


மாலம் பக்காய் சானா

2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வன்முறைகள், மற்றும் இராணுவப் புரட்சியை அடுத்து மாலம் சானா அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் அரசியலில் நிலையற்ர தன்மை காணப்படுவதாகவும், இதனால் குழப்பநிலை உருவாகும் எனவும் கடந்த மாதம் ஐக்கிய அமெரிக்கா கினி-பிசாவு மக்களை எச்சரித்திருந்தது.


1974 ஆம் ஆண்டில் போர்த்துக்கல் இடமிருந்து விடுதலை பெற்ற பின்னர் கினி-பிசாவு நாட்டில் பல முறை இராணுவப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2009 இல் அரசுத்தலைவர் நீனோ வியெரா இராணுவப் புரட்சி ஒன்றின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக இலத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு கினி-பிசாவினூடாகவே போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்துள்ளன. கினி-பிசாவுவின் கடற்படைத் தளபதி ஒரு "போதைப்பொருள் கடத்தல் மன்னன்” என ஐக்கிய அமெரிக்காவினால் குற்றம் சாட்டப்பட்டார்.


நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப, நாடாளுமன்ற சபாநாயகர் புதிய இடைக்கால அரசுத்தலைவராக பதவியேற்றுள்ளார்.


மறைந்த தலைவர் மாலம் சானா நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பற்றியவர். ஆளும் கட்சியில் நீண்டகால உறுப்பினராக இருந்தவர். சூலை 2009 இல் நடந்த தேர்தலில் அரசுத்தலைவராகத் தேர்த்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.


மூலம்

[தொகு]