கிர்கித்தான் தலைவருக்கு உலகின் துணிச்சலான பெண்ணுக்கான விருது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 9, 2011

கிர்கித்தான் அரசுத்தலைவர் ரோசா ஒட்டுன்பாயெவாவுக்கு உலகின் மிகவும் துணிச்சலான பெண்ணுக்கான விருதை அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.


ரோசா ஒட்டுன்பாயெவா

கடந்த செவ்வாய் அன்று வாசிங்டனில் அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் இந்த விருதை உட்டுன்பாயெவாவுக்கு வழங்கினார். மேலும் ஒன்பது பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் முதல் பெண்மணி மிசெல் ஒபாமாவும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார்.


கடந்த ஆண்டு ஏப்ரலில் பெரும் மக்கள் போராட்டத்தின் பின்னர் கிர்கிஸ்தானின் குர்மான்பெக் பாக்கியெவின் ஆட்சியைக் கைப்பற்றிய ஒட்டுன்பாயெவா கடந்த சூன் மாதத்தில் நடந்த பொது வாக்கெடுப்பை அடுத்து நாட்டின் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிவித்த ஒட்டுன்பாயெவா மத்திய ஆசிய நாடுகளில் முதல் தடவையாக மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையைப் பெறுகிறார். 2012 ஆம் ஆண்டில் நாட்டில் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெறவிருக்கிறது.


விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய திருமதி கிளிண்டன், "மத்திய ஆசிய நாடொன்றை ஆளும் ஒட்டுன்பாயெவாவின் பெரும் துணிச்சல், மற்றும் தலைமைத்துவம் ஐக்கிய அமெரிக்காவுக்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது," எனக் குறிப்பிட்டார்.


துணிச்சலுள்ள பெண்களுக்கான விருது 2007 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 27 நாடுகளில் இருந்து மொத்தம் 36 பெண்கள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.


ஒட்டுன்பாயெவாவுக்கு விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து 2010 ஆண்டில் இவ்விருதைப் பெற்ற உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த மனைத உரிமை ஆர்வலர் முத்தாபர் தஜிபாயெவா தனது விருதைத் திரும்பக் கொடுத்துள்ளார்.


சென்ற ஆண்டில் இரத்தம் சிந்திய உள்நாட்டுக் கலவரத்துக்கு ஒட்டுன்பாயெவா பொறுப்பாக இருந்தவர் என தஜிபாயெவா குற்றம் சாட்டியுள்ளார். கிர்கிஸ்தானின் தெற்கில் கிர்கீசுகளுக்கும் உஸ்பெக்குகளுக்கும் இடையில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 400 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]