உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்கிஸ்தான் சனாதிபதித் தேர்தலில் பிரதமர் அத்தம்பாயெவ் வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 31, 2011

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் அந்நாட்டின் பிரதமர் அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


95 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அத்தம்பாயெவ் 63 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளதாக மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் துகுனாலி அப்ராய்மோவொன் தெரிவித்துள்ளார்.


அத்தம்பாயெவை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இருவர் 15% இற்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் நாட்டின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த தேசியவாதிகள் ஆவர். தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாகத் தெரிவித்திருக்கும் இவர்கள், தேர்தல் முடிவுகளைத் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


தேர்தல் ஆணையர் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், அது மொத்தத் தேர்தல் முடிவுகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தியிராது என்றார்.


முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தான் தேர்தலில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.


55 வயதான அத்தம்பாயெவ் நாட்டின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெரும் செல்வந்த வணிகர் ஆவார். உலகின் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானை வளம் மிக்க திரமான நாடாக ஆக்குவதே தமது முதல் பணியாக இருக்கும் என அவர் கூறியிருக்கிறார். சமூக சனநாயகக் கட்சியின் தலைவராக அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் உள்ளார்.


கிர்கித்தான் 5.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு இசுலாமிய நாடு ஆகும். நீண்ட காலமாக அரசுத்தலைவராக இருந்த அஸ்கார் அக்காயெவ் 2005 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து நாட்டை விட்டு வெளியேறினார். இப்புரட்சியில் பங்கெடுத்த குர்மான்பெக் பக்கீயெவ் அடுத்து அதிபரானார். அவரும் பின்னர் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டு பெலருஸ் நாட்டுக்குத் தப்பி ஓடினார். இக்கலவரங்களில் 90 பேர் வரையில் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நாட்டின் தெற்குப் பகுதியில் கிர்கீசுகளுக்கும் உஸ்பெக்குகளுக்க்ம் இடயில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 400 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


கடந்த ஆண்டுப் புரட்சிக்குத் தலைமை வகித்தவரும் தற்போதைய இடைக்காலத் தலைவராகவும் இருக்கும் திருமதி ரோசா ஒட்டுன்பாயெவா இத்தேர்தலில் போட்டியிடவில்லை. இவரது நிருவாகத்தில், நாடாளுமன்றத்தின் அதிகாரம் பெருமளவில் அதிகரிக்கப்பட்டிருந்தது. "தமது ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தாம் நம்புவதாக," அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கிர்கிஸ்தானில் அமெரிக்காவின் பெரும் இராணுவத்தளம் ஒன்று அமைந்துள்ளது. இத்தளத்தின் மூலமே ஆப்கானித்தானின் அமெரிக்க அரசு போரிட்டு வருகிறது. அதனால், இத்தேர்தல் முடிவுகளை அமெரிக்க அரசு மிகத் தீவிரமாகக் அவதானித்து வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]