உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்கிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 13, 2010

கிர்கிஸ்தானில் ஞாயிறன்று இடம்பெற்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு கூட்டாட்சி அமையும் வாய்ப்புகள் அதிகம் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் பிரிந்த பின்னர் முதற்தடவையாக இங்கு நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாண்டின் ஆரம்பத்தில் கிர்கிஸ்தானின் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவ் எதிர்க்கட்சித் தலைவி ரோசா ஒட்டுன்பாயெவாவினால் பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற இனவன்முறைகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஒட்டுன்பாயெவா இடைக்கால அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.


தேர்தல் சட்டங்கள் மாற்றப்பட்டு நாடாளுமன்ற மக்களாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து கடந்த ஞாயிறன்று முதலாவது மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் மோசடிகள், வன்முறைகள் எதுவும் இத்தேர்தலில் இடம்பெறவில்லை என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த சூன் மாதத்தில், நாட்டின் தெற்கில் கிர்கீசு இனத்தவருக்கும், சிறுபான்மை உஸ்பெக்குகளுக்கும் இடையே இடம்பெற்ற வன்முறைகளில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் உஸ்பெக்குகள் ஆவார். 400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.


மூலம்