உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்குத் திமோர் சனாதிபதி தேர்தலில் முன்னாள் போராளிக் குழுத் தலைவர் வெற்றி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 17, 2012

கிழக்குத் திமோர் சனாதிபதித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் முன்னாள் போராளிக் குழுத் தலைவர் தாவுர் மட்டான் ருவாக் பெரும் வாக்குகள் வித்தியாசத்தின் முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, ருவாக் 61% வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பிரான்சிசுக்கோ குட்டரெசு 39% வாக்குகளையே பெற்றுள்ளார். தற்போது சனாதிபதியாக இருக்கும் ஒசே ரமோசு-ஓர்ட்டா முதற்கட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து இரண்டாம் கட்டத்தில் அவர் போட்டியிட முடியவில்லை.


கிழக்குத் திமோரில் சனாதிபதிப் பதவி சம்பிரதாயபூர்வமான பதவியாகவே கருதப்படுகிறது. பிரதம மந்திரி சகானா குஸ்மாவோ அரசுத்தலைவராக உள்ளார். அதிகாரபூர்வமான முடிவுகள் நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டாம் கட்டத்தில் போட்டியிட்ட இருவருமே 20 ஆண்டுகால இந்தோனேசிய ஆட்சியில் கிழக்குத் திமோரின் விடுதலைக்காக போராடியவர்களில் முக்கியமானவர்கள்.


மூன்றாண்டுகள் ஐக்கிய நாடுகளின் ஆட்சியில் இருந்த கிழக்குத் திமோர் 2002 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. முன்னாள் படைவீரர்கள் அந்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையினர் 2006 ஆம் ஆண்டில் அங்கு சென்றனர். அடுத்த சூலை மாதத்தில் இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல்களை அடுத்து அமைதிப் படையினர் அங்கிருந்து வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்

[தொகு]