கோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண்டுபிடித்தது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 24, 2010


சூரியன் போன்ற விண்மீன் ஒன்று அருகில் உள்ள கோள் ஒன்றை விழுங்குவதை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.


ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி

தமது சுற்று வட்டத்தில் செல்லும் கோள்களை விழுங்கும் வல்லமை விண்மீன்களுக்கு உண்டு என முன்னரே வானியலாளர்கள் அறிந்துள்ளனர் எனினும், இப்போதே முதற் தடவையாக அதற்கான ஆதாரங்கள் மிகத் தெளிவாகக் கிடைத்துள்ளன.


அக்காட்சியைப் புகைப்படம் எடுக்கும் அளவுக்கு ஹபிள் தொலைநோக்கி அக்கோளில் இருந்து மிகத் தொலைவில் இருந்த காரணத்தினால், தொலைநோக்கி தந்திருந்த தரவுகளில் இருந்து அறிவியலாளர்கள் படிமம் ஒன்றை வரைந்திருக்கின்றனர்.


இக்கண்டுபிடிப்பு அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ் (The Astrophysical Journal Letters) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது..


வாஸ்ப்-12பி (Wasp-12b) என அழைக்கப்படும் இந்த வெளிக்கோள் முழுவதுமாக அழிவதற்கு இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் வரை பிடிக்கும் என வானியலாளர்கள் கண்டுள்ளனர். இக்கோள் தனது விண்மீனுக்கு கிட்டவாக அமைந்துள்ளது. 1.1 பூமி நாட்களில் தனது சூரியனை இது சுற்றி வருகிறது. இதன் சராசரி வெப்பநிலை 1,500C ஆகும்.


ஐக்கிய இராச்சியத்தின் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கரோல் ஹாஸ்வெல் என்பவர் தலைமையில் இவ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. "கோளைச் சுற்றி வெளியேறிச் செல்லும் பெரும் மேக மூட்டம் காணப்பட்டது, இதனை விண்மீன் கைப்பற்றிக் கொள்ளும்” என அவர் விளக்கினார்.


இக்கண்டுபிடிப்பு மூலம் இக்கோள் எவ்வாறு உருவானது என்பது குறித்து தெளிவான விளக்கத்தைக் கூற முடியும் என அவர் தெரிவித்தார். ”எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே காணக்கிடைக்காத வேதி மூலகங்களை நாம் கண்டறிந்திருக்கிறோம்”.


வாஸ்ப்-12 என்பது அவுரிகா (Auriga) என்ற பால்வெளியில் ஏறத்தாழ 600 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இத்னைச் சுற்றி வரும் வாஸ்ப்-12பி என்ற வெளிக்கோள் 2008 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]