உள்ளடக்கத்துக்குச் செல்

சப்பானின் அக்காட்சூக்கி விண்கலம் வெள்ளிக் கோளை அடையத் தவறியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 9, 2010

வெள்ளி கோளை நோக்கிச் செலுத்தப்பட்ட சப்பானின் முதலாவது விண்கலம் கோளின் சுற்றுப்பாதையை அடையத் தவறி விட்டதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


2010 மே 20 இல் அக்காட்சூக்கி வெள்ளியை நோக்கி ஏவப்பட்டது

அக்காட்சூக்கி என்ற இவ்விண்கலம் வெள்ளியை நோக்கிய தனது பயணைத்தில், வெள்ளியை அண்மியதும் அதன் வேகம் குறையவில்லை எனவும், அது இப்போது வெள்ளியைத் தாண்டிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாண்டு மே 20 ஆம் நாள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதற்கு முன்னர் செவ்வாய்க் கோளை நோக்கி 1998 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட சப்பானிய விண்கலமும் செவ்வாயை அடையவில்லை.


அக்காட்சூக்கியுடனான தொடர்புகள் முதலில் துண்டித்துப் போயிருந்தாலும், தற்போது அது பூமியுடன் தொடர்பில் உள்ள்தாகவும், அது தற்போது சூரியனைச் சுற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


"ஆறு ஆண்டுகளின் பின்னர் இது மீண்டும் வெள்ளிக்கு அண்மையில் வரும் போது மீண்டும் ஒரு முறை முயற்சிப்போம்,” என சப்பானின் ஜக்சா என்ற விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த இட்டோசி சொயினோ தெரிவித்தார்.


ஈசா என்ற ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பிய வீனஸ் என்ற விண்கலம் 2006 ஆம் ஆண்டில் வெள்ளியில் தரையிறங்கியது. அவ்விண்கலத்துடன் இணைந்து கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்ளவென அக்காட்சூக்கி அனுப்பப்பட்டது.


வெள்ளி கோள் கிட்டத்தட்ட பூமியைப் போன்ற பருமன் உடையது, அத்துடன் பூமியின் இயல்புகளைக் கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது. ஐரோப்பாவின் வீனஸ் கலம் அண்மையில் அங்கு 250,000 வயதுடைய எரிமலைக் குழம்புகளைக் கண்டுபிடித்திருந்தது.


இவ்வாண்டு ஆரம்பத்தில் சப்பானின் ஹயபூசா விண்கலம் சிறுகோள் ஒன்றில் இருந்து தூசி மாதிரிகளைச் சேகரித்து வெற்றிகரமாகப் பூமி திரும்பியிருந்தது.


மூலம்[தொகு]