சிட்னியில் இந்திய மாணவி படுகொலை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 14, 2011

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கால்வாய் அருகே கைப்பெட்டி ஒன்றில் இந்திய பெண்ணின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் மெடோபாங்க் என்ற புறநகர்ப் பகுதியில் உள்ள கால்வாய் கரையில் இருந்து கட்டிடத் தொழிலாளர்களால் இந்த கைப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இறந்தவர் 24 வயதுள்ள தோஷா தாக்கர் எனக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இவர் சிட்னியில் உள்ள கல்லூரி ஒன்றில் கடந்த மூன்றாண்டுகளாகக் கணக்கியல் துறையில் படித்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தோஷா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கைப்பெட்டியில் வைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இக்கொலை தொடர்பாக டேனியல் ஸ்டானி-ரெஜினால்ட் (19) என்ற நபர் கைது செய்யப்பட்டு, பேர்வுட் நகர நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக நிறுத்தப்பட்டார். இலங்கை வம்சாவழி ஆத்திரேலியரான இந்த நபர் கொலை செய்யப்பட்ட தோஷா வசித்து வந்த விடுதியிலேயே வேறொரு அறையில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நாள் காலையில் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் வெளியில் சென்றிருந்த வேளையில் இந்தக் குற்றத்தை அவர் செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்த உடலை அவர் துண்டு துண்டாக வெட்டி கைப்பெட்டிக்குள் இட்டு கால்வாயில் எறிந்துள்ளார்.


இவ்வழக்குப் பற்றி காவல்துறைப் பேச்சாளர் பமெலா யங் கருத்துத் தெரிவிக்கையில், இப்பெண்ணுக்கும் குற்றவாளிக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை எனத் தெரிவித்தார். இவ்வழக்கு மீண்டும் மே மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


மூலம்[தொகு]