உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்னி அகதிகள் தடுப்பு முகாம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 21, 2011

சிட்னியில் அமைந்திருக்கும் ஆத்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அம்முகாமின் ஒன்பது கட்டடங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.


விலவூட் தடுப்பு முகாமின் கூரையின் மீதேறிய சில அகதிகள் தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் மீது கூரையின் ஓடுகளைத் தூக்கி எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். நேற்று புதன்கிழமை அன்று இரண்டு அகதிகள் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களுக்கு ஆதரவாக மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் கலவரத்தில் ஈடுபட்டனர்.


இக்கலவரத்தில் எவரும் காயமடையவில்லை என தடுப்பு முகாம் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நிலைமை ம்கட்டுக்கடங்காமல் போகவே கலவரம் அடக்கும் காவல்துறையினர் பின்னர் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


தீப்பற்றிய இடங்களுக்கு தீயணப்புப் படையினர் உடனடியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார். முகாமில் இருந்த சமையலறை, மருத்துவ மனை, கணினி மையம் ஆகியன தீக்கிரையாகியுள்ளன.


அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரே நேற்றைய கலவரத்தில் பெரும்பான்மையாக ஈடுபட்டிருந்ததாக குடிவரவுத் துறை அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்தார். படகுகளில் ஆத்திரேலியாவுக்கு அகதிகளாக வந்தோரும், விசா விதிமுறைகளை மீறியோருமே விலவூட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


மூலம்

[தொகு]