உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்னி முதியோர் இல்லத்தில் தீ விபத்து, நால்வர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 18, 2011

ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் உள்ள முதியோர் இல்லமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து நான்கு முதியோர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் எரிகாயங்களுக்குள்ளாயினர். ஆண் தாதி ஒருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சிட்னியின் மேற்கே குவேக்கர்ஸ் ஹில் என்ற புறநகர்ப் பகுதியில் உள்ள இந்த முதியோர் இல்லத்தில் எழுந்து நடமாட முடியாதவர்களும் மனநிலை பாதிக்கப்பட்டோருமே இருந்தனர். இந்த இல்லத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இரண்டு இடங்களில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 14 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தீ விபத்தை அடுத்து மொத்தம் 88 பேர் அதிகாலை வேளையில் வெளியே படுத்த படுக்கைகளில் இருந்த படியே வெளியே இழுத்து வரப்பட்டனர். பலரும் புகையை உள்ளெடுத்த படியால் மூச்சுத் திணறி இருந்தனர். நூற்றுக்கும் அதிகமான தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.


32 முதியோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஆணையர் கேத்தரின் பேர்ன் தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் எவரும் காயப்படவில்லை என அவர் தெரிவித்தார். தீவிபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாகக் கூறினார். குறித்த முதியோர் இல்லத்தில் பணியாற்றும் 35 வயதுடைய ஆண் தாதி ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் பின்னர் தெரிவித்துள்ளனர். இவர் மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


கடந்த சூலை மாதத்தில் இந்த முதியோர் இல்லத்தில் அவசரகால நீர்த்தூவிகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என நடுவண் அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்தார். ஆனால் சட்டப்படி இது தேவையற்றதாகும் என அவர் தெரிவித்தார்.


1981 ஆம் ஆண்டில் சிட்னியின் சிவேனியா ஹைட்ஸ் என்ற இடத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.


மூலம்

[தொகு]