உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகோள்களின் தாக்கத்தில் இருந்து பூமியைப் பாதுகாக்க நியோஷீல்ட் திட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 21, 2012

பூமிக்குக் கிட்டவாக நகரும் விண்பொருட்களினதும், பெரும் சிறுகோள்கள் மற்றும் வால்வெள்ளிகளினால் பூமிக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு நியோஷீல்டு (NEOShield) என்ற புதிய ஆய்வுத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.


செருமனியின் விண்வெளி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம் குறித்த முதலாவது கூட்டம் இவ்வாரம் இடம்பெறவிருக்கிறது. ஐரோப்பா, உருசியா, மற்றும் அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும்.


இவ்வாறான விண்பொருட்களை பூமியில் மோதாமல் தடுப்பதற்குரிய பொறிமுறைகள் இக்கூட்டத்தில் ஆராயப்படும். "பூமிக்கு அருகில் வராமல் அவற்றின் பாதையை எவ்வாறு மாற்றுவதற்கு சிறுகோள்களைப் பற்றி எத்தகையான அறிவு எமக்குத் தேவை என ஆராய்வோம்," என இத்திட்டத்தின் தலைவர் பேராசிரியர் அலன் ஹரிஸ் கூறினார். மூன்றரை ஆண்டு காலத்தில் இத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு வாகனம் ஒன்றின் பருமனைக் கொண்ட விண்பொருள் ஒன்று பூமியின் வளிமண்டலத்துள் வந்து வெடிக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டரங்கம் போன்ற அளவுடைய விண்பொருள் பூமியைத் தாக்கி அவ்விடத்தில் பெரும் அழிவை ஏற்படுத்துகிறது. சில மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை சில கிலோமீட்டர்கள் அளவுள்ல பொருட்கள் பூமியைத் தாக்கி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


நாசாவின் வைஸ் தொலைநோக்கி அனுப்பிய தரவுகளின் அடிப்படையில், 100 முதல் 1,000 மீட்டர்கள் அளவில் கிட்டத்தட்ட 19,500 பூமிக்குக் கிட்டவாக நகரும் விண்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]