உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகோள்களைக் குடைந்து கனிப்பொருட்களைச் சேகரிக்க கோடீசுவரர்கள் திட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 24, 2012

சிறுகோள்களைக் குடைந்து அதற்குள் இருந்து பெற்றோலியத்துக்குத் தேவையான வேதிப் பொருட்களையும், மற்றும் பிளாட்டினம், தங்கம் போன்ற கனிமப்பொருட்களையும் அகழ்ந்தெடுக்க அமெரிக்கக் கோடீசுவரர்கள் சிலர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.


ஈரோசு என்ற சிறுகோள்

பல-கோடி அமெரிக்க டொலர் செலவிலான இத்திட்டத்தில் திரைப்பட இயக்குனரும், கண்டுபிடிப்பாளருமான ஜேம்ஸ் கேமரன், கூகுள் நிறுவனர் லாரி பேஜ், மற்றும் கூகுளின் தலைமைப் பணிப்பாளர் எரிக் சிமித் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஒரு எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை நிறுவவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.


ஆனாலும், இத்திட்டம் மிகவும் துணிச்சல் மிக்கதெனவும், சிரமமானது எனவும், விலை உயர்ந்ததெனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பிளாட்டினம், தங்கம் ஆகியன அவுன்ஸ் 1,600 டாலர்களாக இருக்கையில், இத்திட்டம் எவ்வாறு விலை பயன் திறன் கொண்டதாகவும் இருக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறுகோள் ஒன்றில் இருந்து 60 கிராம் பொருள் ஒன்றை எடுத்து வருவதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை நாசா தனது அடுத்த திட்டத்தில் செலவழிக்கவிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


இத்திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள் விண்வெளியில் கனிவளம் அதிகமுள்ள சிறுகோள்களைக் கண்டறிவதற்கு நுண்தொலைநோக்கிகளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பூமிக்குக் கிட்டவாகச் செல்லும் ஆயிரக்கணக்கான சிறுகோள்களை இத்தொலைநோக்கிகள் ஆராயும்.


மூலம்[தொகு]