சிறுகோள் 2012 டிஏ14 பூமியை மிகக் கிட்டவாகக் கடந்து சென்றது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 16, 2013

2012 டிஏ14 என்ற சிறுகோள் (asteroid) ஒன்று 27,700 கிமீ தூரத்தில் பூமியைக் கடந்து சென்றது. ஆனாலும் இக்கடப்பினால் புவிக்கோ அல்லது அதனைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.


2013 பெப்ரவரி 15 இல் 2012 டிஏ14 புவியைக் கடக்கும் பாதை

நேற்றிரவு கிரீனிச் நேரம் 19:25 மணிக்கு இது பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது. இச்சிறுகோள் பூமியை நெருங்கியதற்கு சற்று முன்னர் எரிவிண்மீன் ஒன்று உருசியாவில் வீழ்ந்து வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஆனாலும், இந்த எரிவிண்மீன் வீழ்கைக்கும் சிறுகோள் பூமியை நெருங்கியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலன் பிட்சிமன்சு கூறினார்.


2012 டிஏ14 என்ற சிறுகோள் சூரியனை 368 நாட்களுக்கு ஒரு தடவை சுற்றி வருகிறது. ஆனாலும், பூமி சூரியனைச் சுற்றும் அதே தளத்தில் இச்சிறுகோள் சூரியனைச் சுற்றுவதில்லை. இது பூமியை 7.8கிமீ/செ வேகத்தில் கடக்கும் போது, அது பூமியின் கீழ் இருந்து வருவதாகவும், சூரியனின் மேற்புறத்தூடாக செல்வதாகவும் தோன்றும்.


சிறுகோள் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பக்கத்தின் மேலே சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆத்திரேலியா போன்ற இடங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.


இச்சிறுகோளை முதன்முதலாக எசுப்பானிய வானியலாளர்களே 2012 பெப்ரவரி 23 ஆம் நாள் கண்டறிந்து அறிவித்தனர். இது கிட்டத்தட்ட 45 மீட்டர் அகலம் உடையது. குறைந்தது 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியை அணுகும் எனக் கணக்கிட்டுள்ளனர்.


மூலம்[தொகு]