சீனா தனது முதலாவது விண்வெளி ஆய்வுகூடத்தை விண்ணுக்கு ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 30, 2011

சீனாவின் தியேன்குங்-1 என்ற முதலாவது விண்வெளி ஆய்வுகூடம் நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.


தியேன்குங்-1 ஆய்வுகூடம்

உள்ளூர் நேரம் 21:16 மணிக்கு வடமேற்குப் பகுதியில் கோபி பாலைவனத்தில் உள்ள சியுசுவன் செயற்கைக்கோள் ஏவுமையத்திலிருந்து இருந்து ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் மேலாகச் சென்ற ஏவுகலன் பூமியில் இருந்து 350 கிமீ உயர சுற்றுப்பாதைக்குச் செலுத்தப்பட்டது.


10.5மீ-நீள, உருளை வடிவ ஆய்வுகூடம் இப்போது ஆளில்லாமலேயே செல்கிறது. ஆனாலும், அடுத்த ஆண்டு விண்வெளி வீரர்கள் அங்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தானியங்கியாகச் செயற்படவிருக்கும் இந்த ஆய்வுகூடத்துடன் இன்னும் சில வாரங்களில் சென்சோ-8 என்ற ஆளில்லா விண்கலத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. "இது, சீனா நடத்தும் விண்வெளியில் இரண்டு விண்கலன்கள் இணைகின்ற முதலாவது நடவடிக்கையாகும். இது, சீன விண்வெளி நிலையத்தைக் கட்டியமைப்பதற்கு அடிப்படையாகும்," என்று ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணத் திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளர் சூசியான் பிங் கூறினார்.


சென்சோ-8 விண்கலம் வெற்றிகரமாக இணையும் பட்சத்தில், இரண்டு விண்வெளிவீரர்களைக் கொண்ட சென்சோ-9, சென்சோ-10 போன்ற விண்கலங்களை ஆய்வுகூடத்துடன் இணைவதற்காக அடுத்த ஆண்டில் சீனா செலுத்தவிருக்கிறது.


சீனா தனது விண்வெளித் திட்டத்திற்காக பில்லியன்களுக்கும் அதிகமான டொலர்களைச் செலவழிக்கிறது. ஏற்கனவே இரண்டு செயற்கைக்கோள்கள் சந்திரனின் சுற்றுப்பாதையை வலம் வருகின்றன. சந்திரனில் இறங்குவதற்காக மேலும் ஒரு ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தவிருக்கிறது.


தியேன்குங்-1 ஆய்வுகூடம் இரண்டு ஆண்டுகால வாழ்வுக்காலத்தையே கொண்டிருக்கும். இதை அடுத்து மேலும் இரண்டு ஆய்வுகூடங்களை சீனா அனுப்பவுள்ளது. தியேன்குங்-1 இன் திட்டம் முடிவடைந்தவுடன், அது வளிமண்டலத்துள் செலுத்தப்பட்டு, அழிக்கப்பட்டு பசிபிக் பெருங்கடலில் வீழ்த்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]