சுவீடனின் தலைநகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் காயமடைந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 12, 2010

சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோல் நகரில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


டுரொட்டிங்கார்ட்டன் என்ற சன நெருக்கடியான நகர மையப்பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கார் ஒன்று வெடித்ததாகவும், இரண்டாவது கார் சில நிமிட நேரங்களில் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது தாக்குதல் தற்கொலைக் குண்டுவெடிப்பு என சுவீடனின் செய்தி ந்றுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனாலும் காவல்துறையினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.


"தீவிரவாதிகளின் தாக்குதல்கள்" பாரதூரமானதாக இருந்திருக்கும் எனவும், ஆனாலும் அவை தோல்வியில் முடிந்துள்ளது எனவும் சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சர் கார்ல் பில்ட் தெரிவித்தார். இத்தாக்குதல்கள் கவலையளிக்கக்கூடியன எனவும் அவர் தெரிவித்தார்.


டிடி என்ற உள்ளூர் செய்தி நிறுவனம் இத்தாக்குதலுக்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தமக்கு மின்னஞ்சல் மூலம் வந்த பயமுறுத்தல் செய்தி ஒன்று முஜாகுதீன் அல்லது இசுலாமியப் போராளிகளினால் அனுப்பப்பட்டது என அறிவித்துள்ளது. சுவீடனின் ஓவியர் லார்ஸ் வில்க்ஸ் வரைந்த முகமது நபி குறித்த கேலிச்சித்திரம், மற்றும் ஆப்கானித்தானில் சுவீடனின் இராணுவத்தினரின் பிரசன்னம் போன்றவற்றுக்காக சுவீடன் நாட்டவர்கள் எமது சகோதர, சகோதரிகளைப் போல இறக்க வேண்டியவர்கள் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


பன்னாட்டு அமைதிப் படையின் ஒரு அங்கமாக சுவீடனின் 500 படை வீரர்கள் ஆப்கானித்தானில் நிலைகொண்டுள்ளனர்.


மூலம்[தொகு]