2012 இயற்பியல் நோபல் பரிசு பிரான்சியருக்கும் அமெரிக்கருக்கும் வழங்கப்பட்டது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், அக்டோபர் 10, 2012

இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்சைச் சேர்ந்த சேர்ச் அரோஷ் என்பவரும், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வைன்லேண்டு என்பவரும் கூட்டாகப் பெற்றுக் கொண்டனர்.


இதற்கான அறிவிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தனியான துணிக்கைகள், அவற்றின் இயற்கையான கதிரியக்கப் பொறிமுறை நிலையில் பேணப்பட்டிருக்கையில் அவற்றை அளவிடுதல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அவர்களின் பணிக்காகவே இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


குவாண்டம் துகள்களைத் தம் சூழலில் இருந்து தனிமைப்படுத்திக் காண்பது அரிது. புற உலகில் இயங்கும் பொழுது இவை தம் தனித்தன்மையான பண்புகளை இழக்கின்றன, எனவே இவற்றின் வியப்பூட்டும் குவாண்டம் பண்புகளை நேரடியாக உளவி (probe) அறிய முடியவில்லை. ஆனால் இவர்களுடைய சிறப்பான ஆய்வின் பயனாய் ஒளியனைப் பிடிபட்ட நிலையில் உள்ள அணுக்களோடு வினையுறவு கொள்ளச் செய்து, பல அடிப்படைப் பண்புகளை அறிய உதவுகின்றது. வருங்காலத்தில் அணுக் கடிகாரத்தைவிட மிக மிகத் துல்லியமான கடிகாரங்கள் அமைக்க முடியும்.


1944 இல் பிறந்த யூத இனத்தவரான செர்ஜ் அரோஷ் 2001 ஆம் ஆண்டு முதல் பிரான்சுக் கல்லூரியில் பேராசிரியராகவும், குவாண்டம் இயற்பியல் சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். 1944 இல் பிறந்த டேவிட். ஜே. வைன்லேண்டு கொலராடோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இருவரும் 8 மில்லியன் சுவீடிய குரோனர்களை ($1.2 மில்) தமக்கிடையே பகிர்ந்து கொள்வர்.


மூலம்[தொகு]