உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியனுக்குக் குறுக்கே வெள்ளிக் கோளின் மிக அரிதான இடைநகர்வு அவதானிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 6, 2012

வெள்ளிக் கோள் சூரியனுக்குக் குறுக்கே செல்லும் காட்சி பூமியில் இருந்து பல நாடுகளில் நேற்று அவதானிக்கப்பட்டது. மிக அரிதான வெள்ளி இடைநகர்வு என்ற இந்த வானியல் நிகழ்வை அடுத்த தடவை 2117 ஆம் ஆண்டிலேயே காணலாம்.


வடக்கு அரைக்கோளத்தில் இருந்து அவதானிக்கப்பட்ட 2012 வெள்ளி இடைநகர்வு.

வடக்கு, நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் இந்த நிகழ்வை நேற்று மாலை சூரிய மறைவுக்குச் சற்று முன்னர் கண்டு களித்தனர். அமெரிக்காவின் வடமேற்கு, ஆர்க்ட்டிக், மேற்கு பசிபிக், மற்றும் கிழக்காசியா பகுதிகளில் உள்ளோர் முழுமையான இடைநகர்வைக் கண்டனர். ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க மக்கள் சூரிய உதயத்தின் போது இடைநகர்வின் கடைசிப் பகுதியைக் கண்டனர். இலங்கை, இந்தியாவில் இன்று காலை 10 மணி வரை காணக்கூடியதாக இருந்தது.


சூரிய வட்டத்துக்குக் குறுக்கே மிகச்சிறிய கரும் புள்ளியாக வெள்ளி நகர்ந்தது. இந்த நகர்வு ஆறு மணி 40 நிமிடங்கள் வரை நீடித்தது. வெறும் கண்களால் இந்த நிகழ்வைப் பார்ப்பது கண்களுக்கு ஆபத்தானது என முன்கூட்டியே வானியலாளர்கள் எச்சரித்திருந்தனர். இந்நிகழ்வைப் பார்வையிட சிறப்பு அவதான நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.


வெள்ளியின் இடைநகர்வு 243 ஆண்டுகளுக்கு 4 தடவைகள் மட்டுமே இடம்பெறுகின்றன. வெள்ளி ஏறத்தாழ 10 கோடியே 81 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுகின்றது. இது சூரியனை ஒருமுறை முழுமையாக சுற்றிவர 224 நாட்களும் 16 மணித்தியாலங்களும் தேவைப்படுகின்றது.


வெள்ளியினதும் பூமியினதும் சுற்றுவட்டங்கள் ஒரே தளத்தில் இல்லாதபடியால் இடைநகர்வு ஏற்பட பெரும் இடைவெளி ஏற்படுகிறது. அத்துடன், இடைநகர்வின் போது வெள்ளி, பூமி, மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். இன்றைய நிகழ்வுக்கு முன்னர் 1631, 1639, 1761, 1769, 1874, 1882 மற்றும் 2004 ஆகிய நாடுகளில் வெள்ளி இடைநகர்வு அவதானிக்கப்பட்டது. அடுத்த இடைநகர்வு 2117 இலும் பின்னர் 2125 இலும் இடம்பெறும்.


அண்டத்தில் உள்ள பூமியைப் போன்ற கோள்களைப் பற்றிய தகவல்களை அறிவதற்கும், வெள்ளியைப் பற்றியும் அதன் சிக்கலான வளிமண்டலம் பற்றி மேலும் அறியவும் இந்த வெள்ளி இடைநகர்வு நிகழ்வை வானியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.


மூலம்

[தொகு]