சூரியனுக்கு மிகத் தூரத்தில் பனிக்கட்டியாலான குறுங்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 27, 2014

நமது சூரியக் குடும்பத்தில் மிகத் தூரத்தில் புதிய குறுங்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2012 விபி113 (2012 VP113) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்குறுங்கோள் 450கிமீ விட்டமுடையது என்றும், பெரும்பாலும் பனிக்கட்டியால் ஆனது என்றும் நம்பப்படுகிறது.


இதே போன்றதொரு குறுங்கோள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. 90377 செட்னா எனப் பெயரிடப்பட்ட அக்கோள் சுமார் 1,000 கிமீ விட்டமுடையதாகும். ஆனாலும், இதே போன்ற குறுங்கோள்கள் மேலும் நூற்றுக்கணக்கில் காணப்படலாம் என வானியலாளர்கள் கருதுகின்றனர்.


சிலி நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நான்கு-மீட்டர் தொலைநோக்கியில் பொருத்தப்பட்டுள்ள பெரும் புகைப்படக் கருவி மூலம் புதிய குறுங்கோள் அவதானிக்கப்பட்டதாக அமெரிக்காவின் கார்னஜி அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஸ்கொட் செப்பர்டு என்பவர் கூறினார்.


2012 விபி113 பற்றிய தகவல்கள் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இக்குறுங்கோள் சூரியனில் இருந்து 12 பில்லியன் கிமீ தூரத்திற்குக் குறையாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமி சூரியனில் இருந்து 149 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ளது. நெப்டியூன் சூரியனில் 4.5 பில்லியன் கிமீ தூரத்தில் உள்ளது.


2012 விபி113 குறுங்கோள் சூரியனைச் சுற்றிவர 4,000 ஆண்டுகள் பிடிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]