சூரிய ஆற்றலில் இயங்கும் ஜூனோ விண்கலத்தை வியாழனை நோக்கி அமெரிக்கா ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 6, 2011

வியாழன் கோளை நோக்கி ஆளில்லா நாசா விண்கலத் திட்டம் 1.1 பில்லியன் டாலர் செலவில் புளோரிடாவில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஜூனோ ஏவப்பட்ட காணொளி
ஜூனோவின் பாதை

நாசாவின் ஜூனோ விண்கலம் செவ்வாய்க் கோளைத் தாண்டி வியாழனின் சுற்று வட்டத்தை 2016 ஆம் ஆண்டில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழனை நோக்கிச் செலுத்தப்படும் முதலாவது சூரிய ஆற்றலில் இயங்கும் விண்கலமாக இது இருக்கும்.


நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் 12:25 மணிக்கு புளோரிடாவில் அமைந்துள்ள கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் 5 என்ற ராக்கெட் மூலம் இது ஏவப்பட்டது. ஈலியக் கசிவு காரணமாக சிறிது நேரத் தாமதத்துக்குப் பின்னரே விண்ணுக்குச் சென்றது.


"இத்திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் புதிய ஒரு எல்லையை நாசா தாண்ட விருக்கிறது," என நாசாவின் நிர்வாகி சார்ல்ஸ் போல்டன் தெரிவித்தார்.


வியாழன் கோளில் பூமியை விட 1/25 பங்கு சூரிய ஒளியே காணப்படுவதால், அங்கு அனுப்பப்படும் விண்கலங்கள் புளுட்டோனியம் மின்கலங்களையே பயன்படுத்துகின்றன. ஆனால், ஜூனோ விண்கலம் 18,000 சூரியக் கலங்கள் பொருத்தப்பட்ட மூன்று இறக்கைகளுடன் செல்கிறது.


"ஜூனோவின் சூரியக் கலங்கள் எப்போதும் சூரியனை நோக்கியே இருக்க வேண்டும். இதனால் வியாழனின் நிழலுக்குள் நாம் செல்லப்போவதில்லை," என இத்திட்டத்தின் பிரதம அறிவியலாளர் ஸ்கொட் போல்ட்டன் தெரிவித்தார்.


ஜூனோ திட்டம் ஆரம்பத்தில் 2009 ஜூன் மாதத்தில் ஏவுவதற்காக 700 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் திட்டமிடப்பட்டது. ஆனாலும், நாசாவின் வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையினால் திட்டம் பின்போடப்பட்டது. தற்போது இதன் மொத்தச் செலவீனம் $1.1 பில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.


வியாழனின் முனைவுச் சுற்று வட்டத்திற்கு இது சென்று அங்கிருந்து அக்கோளின் பொதிவுகள், ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், வியாழனின் காந்தக்கோளம் போன்றவற்றை ஆராயும். அத்துடன், வியாழன் எவ்வாறு தோன்றியது, பாறைகளை அது கொண்டுள்ளதா, அங்குள்ள நீரின் அளவு, கோளில் அதன் திணிவுப் பரம்பல் போன்றவற்றையும் ஆராயும்.


நாசாவின் நியூ ஃபுரொண்டியர்ஸ் வகைத் திட்டத்தில் ஜூனோ இரண்டாவது விண்கலம் ஆகும். முதலாவது விண்கலம் நியூ ஹரைசன்ஸ் 2006 ஆம் ஆண்டில் புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்டது. இது புளூட்டோவை 2015 இல் அடையும்.


மூலம்[தொகு]