செலாயாவை மீண்டும் அதிபராக்க ஹொண்டுராஸ் இடைக்கால அரசு இணக்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, நவம்பர் 1, 2009


இலத்தீன் அமெரிக்க நாடான ஹொண்டுராசின் பதவி கவிழ்க்கப்பட்ட அதிபர் மனுவேல் செலாயாவை மீண்டும் அதிபராக்குவதற்கு அந்நாட்டு இடைக்கால அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்த இணக்கப்பாடு உள்ளிட்ட அரசியல் நெருக்கடியை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடத் தயாரென இடைக்கால ஜனாதிபதி ரொபேர்ட்டோ மிச்சலெட்டி தெரிவித்துள்ளார்.


மனுவேல் செலாயா

ஹொண்டுராசின் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக்கொண்டு வருவதற்கான முயற்சிக்காக அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாகவே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ஒண்டுராசின் மக்களாட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென செலாயா தெரிவித்துள்ளார்.


இவ் உடன்பாடு ஒண்டுராசின் மக்களாட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

—அதிபர் மனுவேல் செலாயா

ஜூன் 28 ஆம் நாள் இராணுவப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட செலாயா உடனடியாகக் கொஸ்டா ரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். கடந்த மாதம் நடுவில் நாடு திரும்பிய செலாயா தலைநகர் டெகுசிகல்பாவிலுள்ள பிரேசில் தூதரகத்தில் ஒரு மாதகாலமாகத் தஞ்சடைந்திருந்திருந்தார்.


அத்துடன், இந்த உடன்படிக்கையில் அதிகாரப் பகிர்வு அரசாங்கமொன்றை உருவாக்கும் திட்டம் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை இருதரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலம்