உள்ளடக்கத்துக்குச் செல்

டேம் 999 ஆங்கிலத் திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 23, 2011

கேரளத்தில் தயாரிக்கப்பட்ட டேம் 999 (அணை 999) என்ற திரைப்படம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையிலான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


பழமையான ஓர் அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. இந்தத் திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 25 திகதி திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தப் படத்தைக் கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோகன் ராய் இயக்கியுள்ளார். படம் குறித்து இவர் அளித்துள்ள பேட்டியில், "சீனாவில் 1975ம் ஆண்டு பான்கியோ என்ற அணை உடைந்த போது சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதே அபாயம் இப்போது 100 ஆண்டு பழமை வாய்ந்த முல்லைப்பெரியாறு அணைக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியல் பிரச்சனை காரணமாக இந்த விவகாரத்தில் எந்த ஒரு முடிவு எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப்பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும். முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும்," என்று கூறியுள்ளார்.


முல்லைப்பெரியாறு அணையை மையமாகக் கொண்டு, டேம்ஸ் என்ற பெயரில் சோகன் ராய் தயாரித்த குறும்படம், ஹாலிவுட்டில் விருது பெற்றிருந்தது.


உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், 136 அடி வரை நீரைத் தேக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.


இந்நிலையில், இந்தப் படம், முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் கேரள அரசின் பிரசாரம் என்றும், அதை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.


டேம் 999 திரைப்படம் முப்பரிமாணத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியக் கூட்டுத்தயாரிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. அஷிஷ் வித்யார்த்தி, விமலா ராமன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அமீரகத்தில் இத்திரைப்படம் நாளை திரையிடப்படவுள்ளது.

மூலம்

[தொகு]