டோன் விண்கலம் வெஸ்டா சிறுகோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 17, 2011

நாசாவின் டோன் என்ற ஆளில்லா விண்கலம் வெஸ்டா சிறுகோளின் (asteroid) சுற்றுவட்டத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது.


ஓவியரின் கைவண்ணத்தில் டோன் விண்கலமும் வெஸ்டா (இடது) சிறுகோளும், செரசு குறுங்கோளும் (வலது)

530 கிமீ விட்டமுள்ள வெஸ்டாவை சுற்றி வருவதாக டோன் விண்கலம் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெஸ்டாவை அடைய டோன் விண்கலத்திற்கு 4 ஆண்டுகள் பிடித்துள்ளது. அடுத்த ஓர் ஆண்டுக்கு அது வெஸ்டாவை ஆராய்ந்து விட்டு பின்னர் செரசு குறுங்கோளை நோக்கிச் செல்லவிருக்கிறது.


"சிறுகோள் பட்டையில் காணப்படும் மிக முக்கியமான சிறுகோளை முதன் முறையாகச் சுற்றி வரும் இந்த நிகழ்வு ஒரு முக்கியமான படிக்கல்," என நாசா நிர்வாகி சார்ல்ஸ் போல்டென் தெரிவித்துள்ளார்.


"டோன் விண்கலத்தின் ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் சிறுகோள்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு உதவும். 2025 ஆம் ஆண்டுக்குள் சிறுகோள் ஒன்றுக்கு மனிதனை அனுப்பி வைக்க அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். டோன் இத் திட்டம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பெறும்."


வெஸ்டா சிறுகோள் 1807 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய்க்கும் ஜுப்பிட்டருக்கும் இடையில் உள்ள பாறைகள் கொண்ட சிறுகோள் பட்டையில் அடையாளம் காணப்பட்ட நான்காவது சிறுகோள் இதுவாகும்.


டோன் விண்கலம் தற்போது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 188 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ளது. வெஸ்டாவில் இருந்து கிட்டத்தட்ட 200 கிமீ சுற்றுவட்டம் வரை செல்லுவதற்கு நாசா வானியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


சூரியக் குடும்பம் பற்றிய ஆரம்பகால வரலாற்றை அறிய சிறுகோள்கள் பற்றிய ஆய்வுகள் இன்றியமையாதவை ஆகும். கோள்கள் தோன்றியதை அடுத்து எஞ்சிய துண்டுகளே இந்த சிறுகோள்கள்.


மூலம்[தொகு]