தஜிகிஸ்தான் சிறையை உடைத்து போராளிகள் தப்பினர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 23, 2010

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் சிறையொன்றில் இருந்து ஏழு இசுலாமியப் போராளிகள் உட்பட 25 சிறைக்கைதிகள் தப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தலைநகர் துஷான்பேயில் இன்று திங்கட்கிழமை அதிகாலயில் இந்தச் சிறை உடைப்பு நிகழ்ந்துள்ளது. சிறைக் கைதிகள் தப்பியோடும் போது ஐந்து சிறைக் காவலாளிகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர். துப்பாக்கிகளையும் அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களில் உருசிய, மற்றும் ஆப்கானியர்களும் அடங்குவர் என தஜிகிஸ்தானின் ஏசியா பிளஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


எல்லைப் படைகள் உசார்ப் படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தப்பித்த போராளிகள் உஸ்பெகிஸ்தான் இசுலாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் நாட்டின் கிழக்கில் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் இக்குழு ஈடுபட்டிருந்தது.


ஆப்கானிஸ்தானின் எல்லையில் இருக்கும் முன்னாள் சோவியத் நாடான தஜிகிஸ்தானில் உருசியா சார்பு அரசுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே ஐந்தாண்டுகளாக உள்நாட்டுப் போர் 1997 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது.


ஆப்கானிஸ்தானில் போரிடும் தமது படைகளுக்கு தஜிகிஸ்தான் ஊடாகவே ஐக்கிய அமெரிக்கா இராணுவத் தளபாடங்களை அனுப்பி வருகிறது. அத்துடன் தஜிகிஸ்தானில் 10 மில்லிய டாலர் செலவில் தமது இராணுவத்தினருக்கான பயிற்சி முகாம் ஒன்றையும் அமெரிக்கா அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

மூலம்[தொகு]