உள்ளடக்கத்துக்குச் செல்

தனியார் சரக்கு விண்கப்பல் 'ஸ்பேஸ்எக்ஸ்' திட்டம் வெற்றிகரமாக ஆரம்பமானது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 22, 2012

பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் ஸ்பேஸ்எக்ஸ் திட்டம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று முதற்தடவையாக விண்வெளித்திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது.


ஸ்பேஸ்எக்ஸ் திட்டத்தின் டிராகன் விண்கலம்

கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்க்கன் ஏவுகலம் மூலம் டிராகன் என்ற சரக்கு விண்கலம் புளோரிடா ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 03:44 மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 10 நிமிடங்களில் பூமியில் இருந்து 340 கிமீ தூரத்துக்குச் சென்றது. விண்வெளி நிலையத்தைச் சென்றடைய 2 நாட்கள் வரை எடுக்கும்.


வியாழன் அன்று விண்வெளி நிலையத்தில் இருந்து 2.5 கிமீ தூரத்தில் தனது தகவல் தொடர்புகளைப் பரிசோதிக்கும். இது வெற்றிகரமாக முடிவுறும் பட்சத்தில், டிராகன் விண்கலம் வெள்ளிக்கிழமை அன்று விண்வெளி நிலையத்தில் இருந்து 10 மீட்டர் தூரத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படும். விண்வெளி நிலையத்தில் நிலைகொண்டுள்ள விண்வெளி வீரர்கள் தானியங்கிக் கரங்கள் மூலம் விண்கலத்தை விண்வெளி நிலையத்தினுள் இழுத்தெடுப்பார்கள்.


விண்கலத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ள 500 கிகி நிறையுள்ள உணவும், நீர், மற்றும் உபகரணங்களையும் அவர்கள் எடுத்து விட்டு இம்மாத இறுதியில் அதனைப் பூமிக்கு அனுப்புவார்கள்.


2010களின் இறுதியில் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபடவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பெருமளவு பணம் சேமிக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா திட்டமிட்டுள்ளது. இப்பணத்தை பூமிக்கு அப்பால் செவ்வாய், மற்றும் சிறுகோள்களுக்கு மனிதரை அனுப்பும் திட்டத்துக்கு நாசா பயன்படுத்தவுள்ளது.


மூலம்

[தொகு]