உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(தமிழக முதல்வராக ஓ, பன்னீர்செல்வம் பதவியேற்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செவ்வாய், செப்டெம்பர் 30, 2014

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதா கைதானதை தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக 2014, செப்டம்பர் 29 அன்று ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.


செப்டம்பர் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.


ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். முன்பு அமைச்சர்களாக இருத்தவர்களே மீண்டும் பதவியேற்றார்கள் அவர்களின் துறைகள் மாற்றப்படவில்லை.


ஓ. பன்னீர்செல்வம் முதல்வராவது இது இரண்டாவது முறையாகும் டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றிருந்தார்.


தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டு அங்கு கையெழுத்திட்ட பின்னர் மாலை 4.45 மணிக்கு பெங்களூர் விரைந்தார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் விரைந்தனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது.


முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.


இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.20 மணிக்கு தொடங்கியது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டு மின்றி, வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மூத்த தலைவர்கள், தேமுதிக அதிருப்தி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் டிஜிபி நடராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


பெங்களூரில் இருந்து ஜெயலலிதா கொடுத்தனுப்பிய ஒரு கடிதத்தை கூட்டத்தில் படித்துக் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மாலை 4.30 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச் சாமி உள்ளிட்டோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். 6 மணி வரை அங்கு ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் ஆளுனரை சந்திக்க புறப்பட்டனர்.


ஆளுநர் கே.ரோசய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவையும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் அளித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.


இதையடுத்து, ஆட்சி அமைக்க வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வம் தமிழகத்தின் 28-வது முதல்வரானார்



மூலம்

[தொகு]