உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 6, 2024

நாட்டுபுறவியல் துறை உதவி பேராசிரியர் பணிக்கு தமிழ் பட்டதாரிகளையும் தேர்வு செய்வதை எதிர்த்து தொடுக்கபட்ட வழக்கில் நாட்டுபுறவியல் மாணவர்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கியது உயர் நீதிமன்றம்.

விதிமுறையின்படி நாட்டுபுறவியல் துறை உதவி பேராசிரியருக்கான கல்வித் தகுதியாக நாட்டுபுறவியல் பட்டப்படிப்பு இருந்து வந்துள்ளது. இப்பணிக்கான சேர்க்கை குறித்தான அறிவிப்பை கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் பதினோராம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைகழகம் வெளியிட்டது. அதில் நாட்டுபுறவியல் பட்டப்படிப்புடன் தமிழ் எம்.ஏ பட்டபடிப்பையும் கல்வித் தகுதியாக குறிக்கபட்டிருந்த்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

"நாட்டுபுறவியல் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களின் உழலுக்கு எதிராக போராடி வென்றிருக்கிறார்கள்" என்று மதுரை காமராஜர் பல்கலைகழக நாட்டுபுறவியல் துறைத் தலைவர் முனைவர் தர்மராஜ் கருத்து தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

"உண்மையில் இது நான்காவது முறை. நாட்டுப்புறவியல் மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களின் ஊழலுக்கு எதிராகப் போராடி வென்றிருக்கிறார்கள்.

இதற்கு முன் ஒரு முறை, மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையிலும் (2010), ஒரு முறை தமிழ் பல்கலைக்கழகத்திலும் (2014), மூன்றாவது முறை தூய சவேரியார் கல்லூரியிலும் (2016) விதிமுறைகளுக்கு புறம்பாக பணி நியமனம் செய்ய முயற்சித்தார்கள்.

ஒவ்வொரு முறையும் ஒரே காரணம் தான் சொல்லப்படும். நாட்டுப்புறவியல் துறை காலியிடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வராது.

இதிலொரு சூட்சுமம் இருக்கிறது. அதிக விண்ணப்பங்கள் வந்தால் மட்டுமே, அதிக பேரத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். எனவே, நிறுவனங்கள் எப்பொழுதும் போட்டிகள் அதிகரிக்க எல்லா வேலைகளையும் செய்யும். இதனால், தமிழ், வரலாறு, மானிடவியல் பயின்றவர்களும் நாட்டுப்புறவியல் துறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் செய்வார்கள். ஒவ்வொரு முறையும் எனது நாட்டுப்புறவியல் மாணவர்களே இதை எதிர்த்து நீதிமன்றங்களில் போராடுவார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், நாட்டுப்புறவியலுக்கு உயிரைக் கொடுப்பேன் என்று மார்தட்டிக் கொள்ளும் பலரும், இந்த ஊழலுக்குத் துணை நிற்பது தான். நா. வானமாமலை பெயரைச் சொல்லி பிழைப்பவர்கள் கூட தமிழ் பல்கலைக்கழகத்தின் இந்த அராஜகத்திற்கு துணை நின்றார்கள். மானிடவியல் அறிஞர்கள் பலரும் உள்ளடி வேலை பார்த்தார்கள். மூத்த (அதாவது ரிட்டையர்டான) நாட்டுப்புறவியல் அறிஞர்கள் திரைமறைவு சதிகளில் கலந்து கொண்டார்கள். பாதிரியார்கள் ரகசிய கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் பேரம் கூட பேசினார்கள். நாட்டுப்புறவியலுக்கு தமிழ் படித்தவர்கள் வரலாம் என்று ஒத்துக் கொள்ளுங்கள். தமிழ் துறைகளுக்கு நாட்டுப்புறவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்க நாங்கள் ஏதாவது செய்வோம் என்று ஆசை காட்டினார்கள். இதற்கு, நிறைய போட்டியாளர்கள் பலியாகி, போராட்டத்திலிருந்து பின்வாங்கினர்.

தலித்தியம், அடித்தளமக்களியம், மள்ளரியம், மார்க்சியம், விடுதலை இறையியல் என்று புரட்சி பேசிய அத்தனை பேரும் இந்த விஷயத்தில் ஊழலின் பக்கமே நின்றார்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் எதிர்த்தே எனது மாணவர்கள் இந்த வழக்கை நடத்தி, உரிமையை மீட்டிருக்கிறார்கள்.

வெற்றி செய்தியை சொன்னவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் நான் இப்படித்தான் சொன்னேன் -

இனியும் இது ஓயப்போவது இல்லை. அடுத்த வழக்கிற்கு தயாராக இருங்கள்!"