உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 25, 2010


இவ்வாண்டு ஏப்ரலில் இடம்பெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது.


யாழ் தேர்தல் மாவட்டம்


வடக்கு மாகாணத்தில் மாவை சேனாதிராஜா தலைமையிலான 12 பேரின் பெயர்கள் இதில் அடக்கப்பட்டிருந்தன. மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், சி.வி.கே. சிவஞானம், அப்பாத்துரை விநாயகமூர்த்தி (தமிழ் காங்கிரஸ்), சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம், ஆறுமுகம் நடேசு இராசேந்திரன், கந்தையா அருந்தவபாலன், சிவஞானம் ஸ்ரீதரன், ஈஸ்வரபாதம் சரவணபவான் (சுடரொளி, உதயன் ஆசிரியர்), இராசரத்தினம் சிவசந்திரன் (பேராசிரியர்), ஐங்கரநேசன் பொன்னுத்துரை, மற்றும் முடியப்பு ரெமீடியஸ் ஆகியோர் இப்பட்டியலில் உள்ளனர்.


வன்னி தேர்தல் மாவட்டம்


தமிழ் தேசியக் கூட்ட்மைப்பு பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மன்னார் மாவட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகிய எஸ்.சூசைதாசனும் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றார்கள்.


அத்துடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய கே.இராஜ குகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சை குழுவும் வவுனியாவில் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியாகிய புளொட் அமைப்பையும் இந்தத் தேர்தலையொட்டி ஒன்றிணைப்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை; இதனையடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியில் தனித்தும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஈபிஆர்எல்எவ் வரதர் அணியுடன் இணைந்தும் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணம்


மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்தது. இக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், இளைப்பறிய வங்கி உத்தியோகத்தர் கே.ஆறுமுகம், சட்டத்தரணி ரீ.சிவநாதன், இளைப்பாறிய அதிபர் எஸ்.சத்தியநாதன், இளைஞர் சேவை அதிகாரி எஸ்.யோகேஸ்வரன், ரெலோ உறுப்பினர் இந்திரகுமார் நித்தியானந்தம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 1988 இல் ஈரோஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.செளந்தராஜனுக்கும் அப்பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மற்றுமொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம்பெற்றுள்ளார். கே. மனோகரன், செ. இராசையா, எச். வி. விஜேசேன, ரோமியோ குமாரி சிவலிங்கம், வே. தங்கதுரை, எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. வடிவேல், எஸ். பகீரதன் ஆகியோரும் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளனர் .

திருகோணமலையில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.


அரசுத் தலைவர் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதர வளித்த என். ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட 11 பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் துரை ரெட்ணசிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை.


அதேபோன்று சிவநாதன் கிஷோர், க. தங்கேஸ்வரி, ச. கனகரட்னம் ஆகியோர் மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுகின்றனர்.


சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருவதுடன் இம்முறை புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.


பத்மினி சிதம்பரநாதன், கஜன் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சொலமன் சிறில், எஸ். ஜெயானந்தமூர்த்தி, ஆகியோர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் உறுப்பினர் ரி. கனகசபை அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்

[தொகு]