உள்ளடக்கத்துக்குச் செல்

தற்கொலைத் தாக்குதலில் ஆப்கானித்தான் முன்னாள் அதிபர் ரபானி படுகொலை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 22, 2011

ஆப்கானித்தானின் முன்னாள் அரசுத்தலைவர் பர்ஹானுதீன் ரபானி (71) கடந்த செவ்வாய்க்கிழமை தலிபான்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து சிறப்புச் செய்தி கொண்டு வந்துள்ள தூதர் என்று கூறி ரபானியை அவரது இல்லத்தில் சந்தித்த தீவிரவாதி ஒருவர் தனது தலைப்பாகைக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்துக் கொண்டு வந்து வெடிக்கச் செய்துள்ளார். ரபானியைச் சந்தித்தவுடன் அன்போடு தழுவுவது போல் தனது தலையை ரபானியின் தோளில் சாய்த்துக் கொண்டு அந்த குண்டை அவர் வெடிக்கச் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. குண்டுதாரியுடன் இன்னொருவரும் வந்ததாகவும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த அந்த மனிதர் பின்னர் கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புர்ஹானுதீன் ரப்பானி 1980களில் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஆப்கானித்தான் இருந்தபோது சக்திவாய்ந்த முஜாகிதீன் கட்சியின் தலைவராக விளங்கியவர். சோவியத் ஒன்றியம் வெளியேறிய பின் 1992 சூன் 28 முதல் 1996 செப்டம்பர் 27 வரை ஆப்கான் அரசுத்தலைவராக பதவி வகித்தார். பின்னர் அவரிடமிருந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் 2001 இல் சில காலம் இவர் மீண்டும் ஆப்கான் சனாதிபதியாகப் பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆப்கான் ஜனாதிபதி அமீட் கர்சாயினால் உயர் சமாதானப் பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


ஆப்கானித்தான் அரசின் சார்பில் தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர் ரபானி. 1990களில் ஆப்கானித்தானில் நூற்றுக்கணக்கான தலிபான்கள் கொல்லப்பட்ட போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று ரபானி மீது மனித உரிமை அமைப்புகள் புகார் கூறியிருந்தனர். இந்த படுகொலை 2001 இல் தலிபான்களை ஆட்சியதிகாரத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வீழ்த்திய பின்னர் நடந்த மிக முக்கியமான அரசியல் படுகொலை என்று கூறப்படுகிறது.


மூலம்

[தொகு]