உள்ளடக்கத்துக்குச் செல்

தலாய் லாமா அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 13, 2011

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா நாடு கடந்த திபெத்து அரசின் அரசியல் தலைமையில் இருந்து ஒதுங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறார். கடந்த வியாழன் அன்று இதனை அறிவித்த தலாய் லாமா, மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் ஒருவருக்கு அதிகாரங்களை பகிர்வதற்குரிய நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.


டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா

"1960களின் முற்பகுதியில் இருந்து திபெத்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் தலைவராக இருக்க வேன்டும் என மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறியிருந்தேன். இதனைச் செயற்படுத்த வேண்டிய சரியான தருணம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது," என வடக்கு இந்தியாவில் தரம்சாலா நகரில் நாடுகடந்த திபெத்திய அரசின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார். 1959 இல் நடைபெற்ற திபெத் கிளர்ச்சியின் நினைவுதினத்தை முன்னிட்டு இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


மார்ச் மாதத்தில் கூடவிருக்கும் நாடுகடந்த திபெத்திய நாடாளுமன்றத்தின் கூட்டம் கூடும் போது தனது அரசியல் அதிகாரங்களை இல்லாமல் ஆக்கும் வகையாக அரசியலமைப்புக்குத் திருத்தம் கொன்டு வர இருப்பதாக அவர் தெரிவித்தார்.


1959 ஆம் ஆண்டில் சீன ஆட்சிக்கெதிராக இடம்பெற்ற கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து தலாய்லாமா தனது ஆதரவாளர்களுடன் திபெத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வருகிறார்.


சீனா திபெத்தை தனது ஆட்சிப் பகுதி என அறிவித்திருந்தாலும், பெரும்பாலான திபெத்தியர்கள் பல நூற்றாண்டுகளாக இமாலயப் பகுதி தனி நாடாகவே இருந்து வந்துள்ளது எனவும் 1950களில் சீனா அதனை ஆக்கிரமித்தது எனவும் கூறி வருகின்றனர்.


மூலம்

[தொகு]