நாசாவின் கிரெயில் ஆய்வகங்கள் இரண்டும் நிலவில் மோதின

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், திசம்பர் 18, 2012

நாசாவின் நிலவுக்கான ஈர்ப்புப் புலவரைவு செயற்கைக்கோள்கள் இரண்டு நிலவின் 2 கிமீ உயர மலை ஒன்றுடன் மோத விடப்பட்டதன் மூலம் அவற்றின் ஓராண்டு கால ஆய்வுத் திட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.


கிரெயில் ஆய்வகங்கள்

கடந்த ஓராண்டு காலமாக நிலவைச் சுற்றி வந்த "புவியீர்ப்பு மீட்சி மற்றும் உட்பக்க ஆய்வகம்" (Gravity Recovery and Interior Laboratory, GRAIL) எனப்படும் இந்தச் செயற்கைக்கோள்கள் 2011 செப்டம்பர் 10 இல் செலுத்தப்பட்டன. இவை நிலவைச் சுற்றி வந்ததன் மூலம் நிலவின் ஈர்ப்புப் புலவரைபடத்தை மிகத் துல்லியமாக அறிவியலாளர்களால் அறிய முடிந்தது. இரு விண்கலங்களுக்கும் இடையேயான தூரத்தை மிகத் துல்லியமாகக் கணித்ததன் மூலம், நிலவின் மேலோடு முன்னர் எதிர்பார்த்ததை விட மெலிதாக இருப்பது அவதானிக்கப்பட்டது. நிலவில் இவை மோதியதில் நிலவின் உட்புறத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.


விண்கலங்களின் எரிபொருள் முடிவடைந்ததை அடுத்து, நிலவின் வட முனையில் உள்ள மலை ஒன்றுடன் இவை மோத விடப்பட்டன. முதலாவது விண்கலத்துடனான வானொலித் தொடர்புகள் திங்கட்கிழமை கிரினிச் நேரம் 22:28 மணிக்கு துண்டிக்கப்பட்டன. அதற்கு 20 செக்கன்களுக்குப் பின்னர் இரண்டாவதன் தொடர்பும் இழக்கப்பட்டது என நாசா அறிவித்துள்ளது.


இவ்விரு விண்கலங்களும் நிலவில் மோதிய பகுதிக்கு அமெரிக்காவின் முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையான சாலி ரைட் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் கடந்த சூலை மாதத்தில் காலமானார்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]