உள்ளடக்கத்துக்குச் செல்

நிபுணர் குழுவின் பரிந்துரையை தன்னிச்சையாக முன்னெடுக்க முடியாது - பான் கி மூன்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 28, 2011

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை கூறுவதற்காக ஐநா செயலாளர் பான் கி மூன் நியமித்திருந்த நிபுணர் குழுவின் அறிக்கை திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களின் போது பொதுமக்கள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு தனிப்பட்ட முறையில் தனக்கு அதிகாரம் குறைவாகவே உள்ளதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.


இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாடில்லாமலோ அல்லது ஐ.நா. பாதுகாப்புச்சபை, பொதுச்சபை, மனித உரிமைகள் பேரவை அல்லது ஏனைய சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் தீர்மானம் இல்லாமலோ பொதுமக்கள் இறப்புகள் தொடர்பான விசாரணையை அதிகாரபூர்வமாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பான் கி மூன் முன்னெடுக்கமாட்டார். மோதலின்போது தனது செயற்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ள கொழும்பு ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காதென்பதை ஐ.நா. அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கையின் கால் நூற்றாண்டுக் கால யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை விசாரணை செய்வதற்கு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கும் நடவடிக்கையை ஐ.நா. தலைவர் முன்னெடுக்க வேண்டுமென நிபுணர்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால், தனது நிபுணர் குழுவின் பரிந்துரையை தன்னிச்சையாக தான் முன்னெடுக்க முடியாதென பான் கீ மூன் கூறியுள்ளார்.


இது இவ்வாறிருக்க இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் அறிக்கையை அமெரிக்க வெகுவாக வரவேற்றுள்ளது. இந்தக் குழுவின் விபரமான, நீண்ட பணிகளை தாம் பாராட்டுவதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ள ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சூசன் ஈ ரைஸ் அவர்கள், இலங்கையில் நீதி, பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிய அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை பெறுமதியான பங்களிப்பை செய்துள்ளதாக தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பாலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் குறித்த பொறுப்புக் கூறல் உட்பட, அங்கு போருக்குப் பின்னான வெளிப்படைத்தன்மையுடைய நல்லிணக்கத்துக்கான ஆதரவு தரும் முயற்சிகளுக்கு அமெரிக்கா என்றும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.


அதேவேளை ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே குறைபாடுடைய ஒன்று என்றும், பக்கசார்பான ஆவணங்களை அது ஆதாரமாகக் கொண்டது என்றும், சரியான தெளிவுபடுத்தல்கள் இல்லாமல் அது வெளியிடப்பட்டுள்ளது என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இலங்கையின் உள்நாட்டுப் போர் நடந்து முடிந்ததை அடுத்து, இலங்கை அரசாங்கம் மீள் கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளால் குறிப்பாக மீள்குடியேற்றம், முன்னாள் சிறார் போராளிகளை விடுவித்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், ஜனநாயக நடைமுறைகளை மீளக் கொண்டுவருதல் போன்ற விடயங்கள் வடக்கு கிழக்கில் மிகவும் முன்னேற்றங்களைக் கண்டுவருவதாகவும் கூறியுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் அறிக்கை, ஆனால், ஐநா குழுவின் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டமை, சமாதானம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை இலங்கையில் மீளக்கொண்டுவருவததற்கான முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]