உள்ளடக்கத்துக்குச் செல்

நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 26, 2012

நிலவில் காலடி வைத்த முதல் மனிதரும், அமெரிக்க விண்வெளிவீரருமான நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82வது அகவையில் காலமானார்.


நீல் ஆம்ஸ்ட்ராங்

இம்மாத முற்பகுதியில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையை அடுத்து ஏற்பட்ட கோளாறுகளினால் அவர் நேற்று சனிக்கிழமை இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


1969 ஆம் ஆண்டு சூலை 20 இல் நிலவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், "மனிதனுக்கு இது ஒரு சிறிய காலடி, ஆனால் மனித குலத்திற்கு இது பெரும் படி" என அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டு இவருக்கு அமெரிக்காவின் உயர் பொதுமக்கள் விருதான காங்கிரசு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டிருந்தது.


அப்பல்லோ 11 விண்கலத்தின் தலைவராக இவர் நிலவுக்குச் சென்றார். உலகெங்கணும் இருந்து 500 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வைக் கண்டு களித்தனர். ஆம்ஸ்ட்ராங்கும், அவரது சகாவான எட்வின் ஆல்ட்ரினும் மூன்று மணி நேரம் நிலவில் உலவினர். நிலவின் மண் மாதிரிகள் சேகரிப்பு, சோதனைகள், மற்றும் படங்கள் எடுத்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.


அப்பல்லோ 11 பயணம் அவரது கடைசி விண்வெளிப் பயணமாக இருந்தது. பின்னர் அவர் நாசாவில் இருந்து விலகி, விண்வெளிப் பொறியியலில் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.


1930 ஆம் ஆண்டில் ஒகையோ மாநிலத்தில் பிறந்த ஆம்ஸ்ட்ரோங் 1950களில் கொரியப் போரில் அமெரிக்கப் போர் விமானங்களில் விமான ஓட்டியாகப் பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளித் திட்டத்தில் இணைந்து கொண்டார்.


மூலம்

[தொகு]