நீர்நாரைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன?

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
நீர்நாரை

வியாழன், ஆகத்து 13, 2009, அமெரிக்கா:


நீர் நாரை (Flamingo) என்பது நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் கொண்ட பறவை. இப்பறவைகள் ஏன் ஒரு காலிலேயே நீண்ட நேரம் நிற்க விருப்பமுள்ளவை?


விலங்குக்காட்சிச் சாலைகளுக்கு செல்லும் பலரும் கேட்கும் கேள்வி இது. ஆனாலும் இதற்கு எவரும் விளக்கமான பதில் தரவில்லை.


இப்போது கரிபியன் நீர்நாரைகளை நீண்டகாலம் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள் இதற்கு ஒரு விடை கண்டுபிடித்துள்ளார்கள்.


நீர்நாரைகள் தமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கே ஒரு காலில் நிற்கின்றன என அவைர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


பிலடெல்பியாவின் புனித யோசப் பல்கலைக்கழகத்தின் உளவியல் வல்லுநர்கள் மத்தியூ அண்டர்சன், சேரா வில்லியம்ஸ் ஆகியோர் (பரிணாம) படி வளர்ச்சியின் நடத்தைகளை ஆய்வு செய்பவர்கள்.


இவர்கள் நீர்நாரைகளின் நடத்தைகளை ஆராய்ந்தார்கள். குறிப்பாக, மனிதர்கள் இடக்கை, வலக்கை பழக்கங்கள் கொண்டிருப்பது போல, நீர்நாரைகள் தமது உடலின் எப்பகுதியை தமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.


ஒரு காலில் நிற்கும் அமெரிக்க நீர்நாரைகள், டொமினிக்கன் குடியரசு

நீர்நாரைகள் தமது தலைப்பகுதியை ஒரே பக்கத்தில் அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை அவதானித்தார்கள். அத்துடன், தலைப்பகுதியின் எப்பக்கத்தை அதிக நேரம் ஓய்வாக வைத்திருப்பதை வைத்து அவை தமது கூட்டத்தில் ஏனைய பறவைகளுடன் எவ்வாறு முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றன என்பதையும் அது தீர்மானிக்கிறது.


வலப்பக்கத்தில் தலைப்பகுதியை அதிகநேரம் ஓய்வாக வைத்திருக்க விரும்பும் நீர்நாரைகள் அதிக முரட்டுத்தனத்துடன் தென்படுவதாக மத்தியூ அண்டர்சன் தெரிவித்தார்.


இதனை அடிப்படையாக வைத்து நீர்நாரைகள் ஒரு காலில் நிற்கும் பழக்கத்தையும் ஆராய்ந்தார்கள். இதற்காக அவர்கள் கரிபியன் நீர்நாரைகளை (Phoenicopterus ruber) பிலடெல்பியா விலங்குக்காட்சிச் சாலையில் பல மாதங்களாக அவதானித்தார்கள்.


லிசுபன் விலங்குக்காட்சி சாலையில் நீர்நாரை

எந்தக்காலில் அவை நிற்க விரும்புகின்றன என்பது பெரிதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவை குளிர் நீரில் நிற்கும் போது நீண்ட நேரம் ஒரு காலில் நிற்பதையே விரும்புகின்றன.


ஒருகாலில் நிற்பதன் மூலம் அவை பெருமளவில் ஆற்றலை உள்வாங்கிச் சேமிப்பதன் மூலம், அவை நீண்ட நேரம் குளிர்ந்த நீரில் நடக்க முடிகிறது என அண்டர்சன் தெரிவித்தார்.


இரண்டு கால்களையும் நீரில் வைப்பதன் மூலம் அவை அதிகளவு வெப்பத்தை இழக்க வேண்டி வரலாம்.


ஆனாலும் இவை தவிர ஒரு காலில் நிற்பதன் மூலம் வேறு பயன்களையும் நீர்நாரைகள் பெறலாம் என்ற கருத்தையும் அவர்கள் மறுக்கவில்லை.

மூலம்[தொகு]