உள்ளடக்கத்துக்குச் செல்

நீளலகு நாணல் கதிர்க்குருவிகளின் இனப்பெருக்கும் இடம் தஜிகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 24, 2010


மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் நீளலகு நாணல் கதிர்க்குருவிகளின் (Large-billed Reed-warbler) இனப்பெருக்கும் இடம் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


நீளலகு நாணல் கதிர்க்குருவி

இந்த வகை கதிர்க்குருவி உலகில் மிகவும் குறைவாக அறியப்பட்ட குருவிகளில் ஒன்றாகும். இவ்வகையில் ஒரேயொரு குருவி மட்டும் 1867 ஆம் ஆண்டு காணப்பட்டது. அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு வரையில் இவை எங்கும் காணப்படவில்லை.


2006 ஆம் ஆண்டு இவற்றின் ஒரு சில உயிருள்ள பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் இவற்றின் இனப்பெருக்கும் பகுதி என்று கருதப்படும் இடம் ஒன்றை ஆப்கானிஸ்தானில் கண்டுள்ளனர்.


ஆனாலும், இப்போது தஜிகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள இடம் இவ்வகைப் பறவைகளின் இனப்பெருக்கும் பகுதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இது குறித்த ஆய்வுச் செய்திகள் ஏவியன் பயோலொஜி என்ற ஆய்வு இதழில் முதற்தடவையாக வெளியிடப்பட்டுள்ளது.


முதலாவது நீளலகு நாணல் கதிர்க்குருவி (Acrocephalus orinus) வடமேற்கு இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் 1867 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு தாய்லாந்தில் பெட்சாப்புரி என்ற இடத்தில் ஒரு பறவை காணப்பட்டது. இதற்கான டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது.


இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதே பறவை வேறொரு பறவையுடன் தாய்லாந்தின் வேறோர் இடத்தில் காணப்பட்டுள்ளது.


சென்ற ஆண்டு ஆய்வாளர் குழு ஒன்று ஆப்கானிஸ்தானில் 15 பறவைகளைக் கண்டுபிடித்தனர். இவற்றின் டி.என்.ஏ. பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் இவை Acrocephalus orinus என்ற வகையைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அங்கு இனப்பெருக்கும் இடம் உள்ளதா என்பது சர்வதேச விதிகளுக்கமைய உறுதிப்படுத்தபடவில்லை.


அதே காலப்பகுதியில், மத்திய ஆசிய பறவையியல் மற்றும் பறவைகள் காப்புக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் ரஃபயெல் ஆயி, மனுவேல் சுவெய்ட்சர் மற்றும், சுவிட்சர்லாந்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த முனைவர் ஸ்டீவன் எர்ட்விக் ஆகியோரைக் கொண்ட குழு ஆசியாவின் வேறொரு பகுதியான தஜிகிஸ்தானில் பதக்சான் என்ற இடத்தில் 8 நீளலகு நாணல் கதிர்க்குருவிகளைக் கண்டுபிடித்தனர்.


சென்ற ஆண்டு இவைகளைக் கண்டுபிடித்தாலும் இப்போது தான் அவர்கள் அது குறித்தான தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.


"எவ்வளவு குருவிகள் வாழ்கின்றன என்ற எண்ணிக்கையை இப்போது எம்மால் கூற முடியாதுள்ளது. இது குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்," என ஆய்வாளர் சுவெய்ட்சர் தெரிவித்தார்.

மூலம்

[தொகு]