நேபாளத் தலைநகரில் பயணிகள் விமானம் தீப்பற்றி வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 28, 2012

எவரெஸ்டு மலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று நேப்பாளத் தலைநகர் காத்மண்டுவின் அருகே வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 19 பேரும் கொல்லப்பப்டனர். இறந்தவர்களில் ஏழு பேர் பிரித்தானியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர்.


சீதா ஏர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த இவ்விமானம் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரத்தில் அருகில் உள்ள ஆற்றங்கரை அருகில் வீழ்ந்து தீப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இரட்டை இயந்திரங்கள் பொருத்தப்பட்ட டோர்னியர் 228 ரக விமானத்தில் மூன்று நேப்பாள விமானப் பணியாளர்களும், ஏழு பிரித்தானியர்களும், ஐந்து சீனர்களும், ஐந்து நேபாளப் பயணிகளும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


விபத்துக்கான காரணம் தெரியவில்லை, எனினும் பறவை ஒன்று மோதியிருக்கலாம் என திரிபுவனப் பன்னாட்டு விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமானப் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.


சிறியரக விமானங்கள் நேப்பாள மலைப்பகுதிகளில் விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகும்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]