உள்ளடக்கத்துக்குச் செல்

நேப்பாளத்தின் முன்னாள் போராளிகள் முகாம்களை விட்டு வெளியேறுகின்றனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 4, 2012

ஐந்து ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றிய நேப்பாளத்தின் முன்னாள் போராளிகள் பல்லாயிரக்கணக்கானோர் தமது ஆயுதப் போராட்டத்திக் கைவிட்டு முகாம்களில் இருந்து வெளியேறுகின்றனர். இதன் முதற்கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை அன்று நூற்றுக்கணக்கானோர் தமது முகாம்களை விட்டு வெளியேறினர்.


2007 ஆம் ஆண்டில் இருந்து முகாம்களில் தங்கியிருந்த ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முகமாக நிதியுதவி பெறுகின்றனர். அரசுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி, விரும்பியவர்கள் நேப்பாள இராணுவத்தில் இணையலாம் அல்லது ஏனையோர் பணம் பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். பொது வாழ்வில் இணைபவர்களுக்கு $6,000 முதல் $11,000 வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது. சுமார் 6,500 பேர் வரையில் இராணுவத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும், எதிர்பார்த்ததை விட அதிகமானோர் இராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். மொத்தம் 17,000 முதல் 19,000 வரையான போராளிகள் முகாம்களில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் போராளிகளில் மேலும் அதிகமானோரை இராணுவத்தில் சேர்ப்பதற்கு மாவோயிசப் பிரதமர் பாபுராம் பட்டாராய் கடந்த டிசம்பர் மாதத்தில் விருப்பம் தெரிவித்திருந்தாரெனினும், முக்கிய எதிர்க்கட்சி இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாதிருக்கின்றது.


1996 ஆம் ஆண்டில் மாவோயிசவாதிகள் தமது "மக்கள் போரைத்" தொடங்கினர். மொத்தம் 13,000 பேர் வரையில் உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டனர். 2006 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது.


மூலம்

[தொகு]