நேப்பாளத்தில் இமயமலைப் பனிச்சரிவில் சிக்கி மலையேறிகள் பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 24, 2012

இமயமலையில் பனிச்சரிவு ஒன்று சனிக்கிழமை அன்று மலையேறிகளைத் திடீரெனத் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், பலரைக் காணவில்லை.


செருமனியர் ஒருவர், மற்றும் நேப்பாள வழிகாட்டி ஒருவரினதும் உடல்கள் மனசுலு மலையில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஏழு பேரினது உடல்களைத் தாம் கண்டதாக மீட்பு விமானிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் இருவர் எசுப்பானியர் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


குறைந்தது ஐந்து மலையேறிகள் உயிருடன் காப்பற்றப்பட்டனர் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். இறந்தவர்களில் நால்வரும், காணாமல் போனோரில் மூவரும் பிரெஞ்சு நாட்டவர்கள் ஆவர்.


8,156 மீட்டர் உயர மலையில் 7,000 மீட்டர்கள் உயரத்திலேயே பனிச்சரிவு இடம்பெற்றது.


உலகின் 14 உயரமான மலைகளில் எவரெஸ்ட் மலை உட்பட 8 மலைகள் இமயமலைகளில் உள்ளன. மனசுலு மலை உலகின் 8வது உயரமான மலையாகும். இதுவே மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மலை எனக் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் பலர் இங்கு கொல்லப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் இக்குன்றுகளில் ஏறுவதற்காக இங்கு வருகின்றனர்.


கூதிர் கால மலையேறும் பருவ காலம் இம்மாதம் ஆரம்பமானது.


மூலம்[தொகு]