உள்ளடக்கத்துக்குச் செல்

நேப்பாளத்தில் பிரதம நீதியரசர் கில்ராஜ் ரெக்மி தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 15, 2013

நேப்பாளத்தின் புதிய இடைக்கால அரசின் தலவராக அந்நாட்டின் பிரதம நீதியரசர் கில்ராஜ் ரெக்மி பதவியேற்றுள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் தேர்தல்களை நடத்துவதே இவ்வரசின் முக்கிய நோக்கமாக இருக்கும்.


நான்கு முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடு ஒன்றின் படி இந்த இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது. நேப்பாளத்தின் கடைசி நாடாளுமன்றம் 2008 ஆம் ஆண்டில் தேர்தெடுக்கப்பட்டது. ஆனாலும் புதிய அரசியலமைப்பை வெளியிடாமலே அதன் பதவிக்காலம் 2012 மே மாதத்தில் முடிவடைந்தது. அதன் பின்னர் ஐக்கிய கம்யூனிஸ்ட் (மாவோயிச) கட்சியின் தலைவர் பாபுராம் பட்டாராய் என்பவர் இடைக்காலத் தலைவரானார். சில அரசியல் கட்சிகள் இவரது பதவியேற்பை விரும்பாததால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து 2012 நவம்பரில் இடம்பெறவிருந்த தேர்தல்கள் தள்ளிப்போடப்பட்டன.


புதிய உடன்பாட்டின் படி நீதியரசர் தலைமையிலான இடைக்கால அரசு வரும் சூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களைக் கண்காணிக்கும். புதிய அரசியலமைப்பும் அதன் பின்னர் வரையப்பட விருக்கிறது. இது நாட்டில் நிலையான அமைதியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ரெக்மியின் புதிய பதவி இடைக்காலத் தேர்தல் அரசின் தலைவர் என்பதாகும். தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் அவர் மீண்டும் பிரதம நீதியரசராகத் தமது பழைய பணியைத் தொடருவார்.


மூலம்[தொகு]