பசிபிக் பெருங்கடலில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 14, 2012

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் 1880களில் இருந்து கடல்மட்டம் உயர்ந்து வருகிறது. 1990களில் இப்பகுதியில் கடல்மட்டம் குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளது தற்போது அறியப்பட்டுள்ளது. மனிதர்களினால் செயற்கையாக உருவாக்கப்படும் காலநிலை மாற்றங்களினால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


தெற்கு ஆத்திரேலியாவின் தாஸ்மானியா தீவில் இருந்து எடுக்கப்பட்ட உவர் சேற்று நில மண்ணின் படிவுகளின் மாதிரிகளில் இருந்து கடந்த 200 ஆண்டுகளில் கடல்நீர் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


"மொத்தமாக, கடந்த 200 ஆண்டுகளில் இப்பகுதியில் கடல்மட்டம் 20 செண்டிமீட்டர்களினால் அதிகரித்துள்ளது," குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் பட்ரிக் மொஸ் தெரிவித்தார். "தாஸ்மானியா அருகில் கடல்மட்டம் 1880 வரையில் தொடர்ந்து 6,000 ஆண்டுகளாக ஏறத்தாழ நிலையாக இருந்திருக்கிறது. 1880ம் ஆண்டுக்குப் பின்னரே நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது."


புவியின் பனிப் பிரதேசங்களில் 500 ஆண்டுகால குளிரான தன்மை 1850 ஆம் ஆண்டு வாக்கில் குறையத் தொடங்கியதை இதற்குக் காரணமாகக் கருதலாம். இதைத்தொடர்ந்து பனியாறுகள் உருகத் தொடங்கியதை அடுத்து கடல்மட்டம் பசிபிக் பகுதியில் உயரத் தொடங்கியது.


இப்போது பருவநிலைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்குக் காரணம் மனிதர்கள் தான் என்பதால் இந்த எச்சரிக்கை அரசுகளுக்கும் மக்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டும்.


இது குறித்த ஆய்வுக்கட்டுரை பூமி மற்றும் கோள் அறிவியலுக்கான ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஆத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், மற்றும் நியூசிலாந்து ஆய்வாளர்கள் பங்குபற்றினர்.


மூலம்[தொகு]