உள்ளடக்கத்துக்குச் செல்

பசிபிக் - அத்திலாந்திக் கடல்களை இணைக்கப் புதிய கால்வாய், நிக்கராகுவா நாடாளுமன்றம் ஒப்புதல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 14, 2013

பசிபிக், மற்றும் அத்திலாந்திக் பெருங்கடல்களை இணைக்க அவற்றின் குறுக்கே கால்வாய் ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு நிக்கராகுவா காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது.


பனாமா, நிக்கராகுவா கால்வாய்களின் ஒப்பீடு

பனாமா கால்வாய்க்குப் போட்டியாக $40 பில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்படவிருக்கும் இக்கால்வாயை நிர்மாணிக்க சீனாவைச் சேர்ந்த "ஹொங்கொங் நிக்கராகுவா கால்வாய் அபிவிருந்தி முதலீட்டு நிறுவனத்திற்கு” 50 ஆண்டுகள் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.


இக்கால்வாய் அமைக்கப்பட்டால் இதனூடாகச் செல்லும் சரக்குக் கப்பல்களால் நிக்கராகுவா ஏரிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இப்படியான பாரிய திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட ஹொங்கொங் நிறுவனத்திற்குப் போதிய அனுபவம் இல்லை என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், இத்திட்டம் கரிபியன் பிராந்தியத்திற்குப் பெரும் நன்மையைக் கொண்டு வரும் என நிக்கராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்ட்டேகா தெரிவித்துள்ளார்.


கரிபியன் கரையை பசிபிக்குடன் இணைப்பதற்கு நிக்கராகுவாவின் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாகக் கனவு கண்டு வந்தனர். இவர்களின் முயற்சி பல முறை தடைப்பட்டு வந்தது. கடைசியாக 1914 ஆம் ஆண்டில் அமெரிக்கா பனாமா கால்வாயை அமைத்ததை அடுத்து இவர்களின் கனவு முற்றாகத் தகர்க்கப்பட்டது.


"இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அல்ல," என நிக்கராகுவா காங்கிரஸ் உறுப்பினர் ஜெசிண்டோ சுவாரெசு செய்தியாளர்களிடம் கூறினார். "புவியியல் ரீதியாக நிக்கராகுவாவின் அமைவிடம் சிறப்பான இடத்தில் அமைந்துள்ளது. இதனாலேயே இது குறித்த திட்டம் எப்போதும் எம்மிடம் இருந்து வந்தது, என அவர் கூறினார்.


மூலம்

[தொகு]