பனாமாவின் முன்னாள் தலைவர் நொரியேகா பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 27, 2010

பனாமாவின் முன்னாள் அரசுத் தலைவர் மனுவேல் நொரியேகா 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் சிறைத்தண்டனை அநுபவித்த பின்னர் அங்கிருந்து பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்.


மனுவேல் நொரீயேகா

நொரியேகா பாரிஸ் நோக்கிச் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளார் என்பதை பிரெஞ்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


பிரான்சின் நீதிமன்றம் ஒன்று 1999 ஆம் ஆண்டில் ஊழல் குற்றத்துக்காக நொரியேகாவுக்கு அவர் இல்லாத நிலையில் தண்டனை விதித்திருந்தது. எனினும் அவருக்கு எதிராகப் புதிதாக விசாரணை நடத்தப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.


76 வயதான நொரியேகா 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்தவுடன் பனாமாவுக்குத் திருப்பி அனுப்பும்படி அந்நாடு வேண்டுகோள் விதித்திருந்தது. ஆனாலும், பிரான்சுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து கடந்த பெப்ரவரியில் நொரியேகா மனுச் செய்திருந்தார். அதனை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது.


நொரியேகா பனாமாவின் அரசுத்தலைவராக 1983 இல் பதவியேற்கும் முன்னர் பல ஆண்டுகள் நாட்டின் இரகசியத்துறைக்குத் தலைவராகப் பணியாற்றினார். அதன் பின்னர் தேசியப் படைக்குத் தலவராக 1982 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்.


1960களின் பிற்பகுதியில் இவர் அமெரிக்காவின் இரகசியத் துறையான சிஐஏ இனால் பணிக்கு அமர்த்தப்பட்டார். 1987 வரை அவர் அமெரிக்க அரசினால் ஆதரவளிக்கப்பட்டு வந்தார்.


1988 ஆம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவர் சம்பந்தப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டார். அதன் பின்னர் அவருக்கும் அமெரிக்க அரசுக்கும் இருந்த உறவு முறிந்தது.


அடுத்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களை அடுத்து நொரியேகா அங்கு “போர் நிலை”யை அறிவித்தார். பனாமாக் கால்வாயில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கும் பனாமாப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை வலுத்தது.


அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் பனாமா நகரில் கொல்லப்பட்டதை சாட்டாக வைத்து டிசம்பர் நடுப்பகுதியில் அமெரிக்கா பனாமாவை முற்றுகையிட்டது.


இதையடுத்து வத்திக்கன் தூதரகத்தில் நொரியேகா தஞ்சமடைந்தார். அமெரிக்கப் படைகள் தூதரகத்தின் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்ததை அடுத்து 1990 ஆம் ஆண்டு சனவரி 3 ஆம் நாள் நொரியேகா அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். இதையடுத்து அவர் மயாமிக்கு விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்டார்.


1992 ஆம் ஆண்டில் அவருக்கு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படட்து. பின்னர் அது 30 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, மேலும் அவரது நன்னடத்தைக்காக 17 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

மூலம்[தொகு]