பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 5, 2016

வாசிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) ஞாயிற்றுக்கிழமை 'பனாமா பேப்பர்சு' என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.


பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொசாக் ஃபொன்செக நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்து வெளியானதையடுத்து, உலகின் அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும் எப்படி தங்கள் செல்வத்தைப் பதுக்க, வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.


இச்சட்ட நிறுவனம் அமெரிக்க அரசு தடை செய்திருந்த 33 நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கும் வேலை செய்துள்ளது. பனாமாவில் இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 500 செல்வாக்கு மிக்கவர்கள் அடங்கிய ரகசிய பனாமா பேப்பர்சு பட்டியலை உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தீர விசாரிக்கும் என்று அதன் தலைவர் முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தெரிவித்துள்ளார்.


கருப்புப் பண விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் துணைத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் அமலாக்க இயக்குனரகம், வருமானவரித் துறை மற்றும் வருவாய் உளவு இயக்குனரகம் ஆகியவை இந்த பனாமா பட்டியலை ஆராய்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.


இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்சு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஐசுலாந்து பிரதமரும், பாக்கித்தான் அதிபர் நவாசு செரிப்பின் மகன்களும் மகளும், உருசிய அதிபரின் நெருங்கிய நண்பரும், சீன அதிபரின் உறவினரும், சீன பொதுவுடமை கட்சியின் 8 உறுப்பினர்களும் பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரூனின் தந்தையும் இதில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளவர்கள்.

மூலம்[தொகு]