உள்ளடக்கத்துக்குச் செல்

பப்புவா நியூ கினியில் அகதிகளுக்கான முகாம் அமைக்க ஆத்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 11, 2012

ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் வரும் அகதிகளை பப்புவா நியூ கினியில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தங்கி வைத்து அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க ஆத்திரேலிய அரசு சமர்ப்பித்த சட்டமூலத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதித்துள்ளது.


பப்புவா நியூ கினியின் மானுசு தீவில் அகதிகளைத் தங்க வைக்க இதன் மூலம் நாடாளுமன்றம் அனுமதித்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அங்கு முதல் தொகுதி அகதிகள் அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


2008 ஆம் ஆண்டில் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்நடைமுறையை ஆத்திரேலியா தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் பசிபிக் தீவான நவூருவில் அகதிகளுக்கான தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு அங்கு தற்போது இருநூறுக்கும் அதிகமானோர் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை, மற்றும் ஆப்கானிய அகதிகள் ஆவர்.


மானுஸ் தீவில் இருந்த முகாம் எட்டாண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. தற்போது அதனை மீளப் புனரமைக்கும் வேலைகளை அங்கு நிலைகொண்டுள்ள ஆத்திரேலிய இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். இம்முகாமில் 600 அகதிகள் வரை தங்க வைக்கப்படுவர் என ஆத்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.


சட்ட விரோதப் படகுகள் தொடர்ந்து ஆத்திரேலியாவுக்குள் தற்போதும் வந்து கொண்டிருந்தாலும், சிலர் தமது நாட்டுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து மீளச் சென்றுள்ளனர் என கிறிஸ் போவன் கூறினார்.


மூலம்[தொகு]