பராகுவே அரசுத்தலைவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 24, 2012

இலத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயின் அரசுத்தலைவர் பெர்னாண்டோ லூகோ தனது அதிகாரத்தை நெறிதவறிப் பாவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இவரது பதவி நீக்கத்தை அடுத்து இலத்தீன் அமெரிக்க நாடுகள் பராகுவே மீது கடும் சீற்றம் அடைந்துள்ளன.


பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசுத்தலைவர் பெர்னாண்டோ லூகோ

அர்ஜென்டீனா, பிரேசில், மற்றும் உருகுவாய் ஆகிய நாடுகள் தமது தூதர்களை ஆலோசனைக்காக மீள அழைத்துள்ளன. எக்குவடோர், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளன. ஆனாலும், லூகோவின் பதவி நீக்கம் அரசியல் சூழ்ச்சி அல்லவென்று புதிதாக அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள பெதெரிக்கோ பிராங்கோ வலியுறுத்தியுள்ளார். நாட்டில் நடைமுறையில் உள்ள மக்களாட்சியில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார். இவர் முன்னர் லூகோவின் அரசில் பிரதித்தலைவராகப் பணியாற்றியவர்.


கடந்த வெள்ளியன்று மேலவையில் 39-4 என்ற வாக்கு வித்தியாசத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்ததை அடுத்து பெர்னான்டோ லூகோ பதவி விலகினார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசித்து வந்த 150 விவசாயிகளை வெளியேற்ற கடந்த வாரம் காவல்துறையினருக்கு லூகோ உத்தரவிட்டதை அடுத்து விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் மோதலில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. விவசாயிகள் பல ஆண்டுகளாக வசித்து வந்த 4,900 ஏக்கர் நிலம், கொலராடோ கட்சி அரசியல் தலைவருக்கு சொந்தமானது என்றும் அதனைக் கைப்பற்ற சட்டத் திருத்தம் கொண்டு வரவும் லூகோ முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும், 5 குற்றச்சாட்டுகளின் கீழ் லூகோ மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற செனட்டில் இதுதொடர்பாக விசாரணை நடந்த போது, அதில் அதிபர் லூகோ சமூகமளிக்கவில்லை.


அடுத்த வாரம் அர்ஜென்டீனாவில் நடைபெறவிருக்கும் மெர்க்கோசூர் என்ற தென்னமெரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் இந்த அரசியல் புரட்சி" குறித்து முடிவெடுக்கப்படும் என அர்ஜென்டீன அரசுத்தலைவர் கிறித்தீனா பெர்னான்டசு அறிவித்துள்ளார்.


அமெரிக்காவும் எசுப்பானியாவும் இது குறித்து கண்டனம் எதுவும் தெரிவிக்காவிடினும், பராகுவேயில் சனநாயகத்துக்கான தேவையை வலியுறுத்தியுள்ளன.


மூலம்[தொகு]