பர்மிய அரசுத்தலைவர் காரென் போராளிகளுடன் சந்திப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, ஏப்ரல் 7, 2012

பர்மிய அரசுடன் போரிட்டு வரும் காரென் போராளிகளின் தலைவர்களுக்கும் பர்மிய அரசுத்தலைவர் தெய்ன் செய்னுக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்ததாக காரென் தேசிய ஒன்றியம் என்ற போராளிகள் குழு தெரிவித்துள்ளது.


60 ஆண்டுகளுக்கும் மேலாக காரென் போராளிகள் தமது இனத்தவருக்குத் தனிநாடு கோரிப் போரிட்டு வருகின்றனர். மிக நீண்ட காலமாக இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரில் இப்படியான ஒரு உயர்மட்டச் சந்திப்பு நடப்பது இதுவே முதற்தடவையாகும்.


கடந்த மாதம் காரென் இனத் தலைவர் ஒருவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இரு பகுதிகளும் ஏற்கனவே தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டிருந்தன. காரென் தேசிய ஒன்றியத்தின் தலைமையகம் தாய்லாந்தில் சட்டவிரோதமாக இயங்குகின்றது.


பர்மா 1948 ஆம் ஆண்டில் பிரித்தானியர்களிடம் விடுதலை பெற்றதில் இருந்து அங்கு இனமோதல்கள் இருந்து வருகின்றன. இதனை அடுத்து சிறுபான்மையின மக்கள் பலர் எல்லையைத் தாண்டி தாய்லாந்தில் குடியேறியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.


காரென் போராளிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆங் சான் சூச்சி அம்மையாரைச் சந்திக்கவுள்ளனர். கடந்த வாரம் நடந்த இடைத்தேர்தல்களில் 45 இடங்களில் போட்டியிட்ட சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி 43 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]