உள்ளடக்கத்துக்குச் செல்

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ரவிச்சந்திரன் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 26, 2011

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ரவிச்சந்திரன் சிறுநீரகக் கோளாறு காரணமாக நேற்று திங்கட்கிழமை அன்று இரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 71. அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.


ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை' படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தான் நடித்த முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரானார். நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரவிச்சந்திரன் 1960கள்-70களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.


ஆண்டுக்கு பத்து படங்கள் வரை வெளியாகி அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்ததில் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "காதலிக்க நேரமில்லை", "இதயக்கமலம்", "குமரிப்பெண்", "நான்", "மூன்றெழுத்து", "அதே கண்கள்", "உத்தரவின்றி உள்ளே வா" என பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்தார்.


அண்மைக்கால திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்தார். கடைசியாக நடித்த படம் ‘ஆடுபுலி‘. இதுதவிர ‘மானசீக காதல்‘, ‘மந்திரன்‘ உள்பட 7 படங்களை இயக்கினார். தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார்.


மறைந்த நடிகர் ரவிசந்திரனின் பூர்வீகம் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். ஆனால் அவரது குடும்பம் மலேசியாவில் வசித்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் ‘தமிழ் நேசன்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார். . மறைந்த ரவிசந்திரனுக்கு விமலா என்ற மனைவியும் பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். அம்சவர்தனும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


மூலம்

[தொகு]